வைத்தியர் கொலை: மன்னித்தது நீதிமன்று!
விடுதலைப்புலிகள் அமைப்பின் காயமடைந்த போராளிகளிற்கு வவுனியாவில் சிகிச்சையளித்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட வைத்தியர் முகைதீன் கொலையின் குற்றவாளியான தமிழீழ மக்கள் விடுதலைக்கழக முக்கியஸ்தர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை இரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்விலேயே தண்டனை இரத்து தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில், தீர்ப்பிற்கு எதிராக கௌரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் , குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் சந்தேக நபரை முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.
இறுதி யுத்த காலப்பகுதியில் வவுனியாவில் ஆட்கடத்தல் மற்றும் கொலைகளை இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக்கழக உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment