சுவீடனில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி!
சுவீடனின் உப்சாலா நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்தது. முகமூடி அணிந்த தாக்குதலாளி தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு செவிமடுக்கப்பட்டதும் மக்கள் பல திசைகள் நோக்கி தப்பியோடினர்.
ஸ்டாக்ஹோமிலிருந்து 45 மைல் வடக்கே உள்ள பல்கலைக்கழக நகரமான உப்சாலாவின் மையத்தில் ஒரு பெரிய பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
முகமூடி அணிந்த ஒருவர் குற்றம் நடந்த இடத்திலிருந்து மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் செல்வதைக் கண்டதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பாரம்பரியமாக சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்க்கும் வசந்த விழாவைக் கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்பு உப்சாலா நகரின் மையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
குறிப்பாக நாட்டின் பல ஊடகங்கள் துப்பாக்கிச் சூடு ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அருகில் நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலா அல்லது வெறுப்பு குற்றமா என்பதற்கான எந்த தகவலும் இல்லை என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது காவல்துறையினரால் கொலை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment