விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடாத்துகிறோம்


முழுநாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பதுளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கத்தின் இரண்டாவது பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.  அதில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். 

தற்போது நிதி இருக்கின்ற போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தி பணிபுரிவதற்கு ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. 

அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ள இலங்கை நிபுணர்கள் குழு எதிர்வரும் 23ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளது. 

இதன்போது, நாட்டுக்குச் சாதகமான வகையில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

அதேநேரம், சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மிகவும் சூட்சுமமாக இடம்பெறுவதால் அது குறித்து மக்களால் தற்போது அறிந்துகொள்ள முடியாது. 

எனினும், விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன என்ற உறுதியை வழங்க முடியும். மௌனமாக இருந்தவர்கள் இன்று வாய்திறந்து வாக்குமூலம் வழங்கி வருகின்றனர். 

முக்கியமான பல சம்பவங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளால் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு தாமதம் ஏற்படலாம். 

எனினும், குற்றமிழைத்த சகலருக்கும் உரிய வகையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments