தள்ளாடும் விசாரணைகள்!





தென்னிலங்கை சகோதர ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் கூட தள்ளாடி வரும் நிலையினில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளை பெயரளவினில் கூட இந்த அரசும் ஆரம்பிக்கவில்லையென்பதே உண்மையாகுமென இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20ஆம் நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படடிருந்தது. 

யாழ்; ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பிரதான வீதியில் அமைந்துள்ள, படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும், அதே தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் ஆகியோரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்பட்டது.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய நினைவேந்தலின் போது பெருமளவிலான காவல்துறையினர்  மற்றும் புலனாய்ப்பிரிவினர் குவிக்கப்பட்டு கடும் அச்சுறுத்தல் சூழல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments