பாசையூரிலிருந்து வல்வெட்டித்துறை: அநுர குமாரவின் நுண்ணிய நகர்வு! பனங்காட்டான்
வடக்கே செல்லும் அநுர குமார தமது மக்கள் சந்திப்புக்கான கூட்டங்களை நடத்துவதற்குரிய இடங்களாக இங்குள்ள கரையோரப் பட்டினங்களான பாசையூர், வல்வெட்டித்துறை ஆகியவற்றை தெரிவு செய்வதில் ஏதாவது உள்நோக்கம் உண்டா? கடற்றொழில் அமைச்சராக தமது வடபகுதி அமைப்பாளரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நியமித்ததற்கும் இதற்கும் ஏதாவது தொடர்புண்டா?
இப்பொழுது சில நாட்களாக ஊடகங்களில் - முக்கியமாக சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்தியானது, அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் முரண்பாடு, அதிருப்தி, வெடிப்பு என்றவாறாகவே உள்ளது. இதனைப் படிக்கும்போது புதிய அரசாங்கம் விரைவில் கவிழ்ந்து விடப்போகிறது போன்ற பரபரப்பு ஏற்படுகிறது.
சில ஊடகங்கள் தங்கள் விருப்புகளை - அவைகள்தான் நடைபெறப்போகின்றன என்றவாறு செய்திகளை ஊதிப் பெருப்பிப்பது புதிய சங்கதியல்ல. இவ்வாறான செய்திகளை கிளர்ச்சிப் பாங்கானவை என்பர். சிலசமயம் இது அந்த ஊடகங்களின் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
இவ்வாறான செய்திகள் பற்றி மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமது கருத்தை எழுத்தில் தந்திருந்தார். 'ஒரு செய்தி அதன் நடைமுறைத் தன்மையில் இயற்கையில் கிளர்ச்சிப் பாங்கானதாக அமையும். ஆனால், சில செய்திகளை வாசகர்களைக் கவர்வதற்காக கிளர்ச்சிப் பாங்கானதாக மாற்றிப் பிரசுரிப்பர். இது மிகவும் மோசமானது. ஊடக தர்மத்துக்கு அப்பாற்பட்டது" என்று 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரியில் கட்டுரை ஒன்றில் பேராசிரியர் சிவத்தம்பி சுட்டியிருந்தார்.
இலங்கையில் இப்போதிருக்கும் ஆட்சித் தரப்பு முன்னர் ஒருபோதும் ஆட்சியமைத்ததல்ல. உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகவும் இருந்ததல்ல. ஆனால், எதிரணியிலிருந்தவாறு ஆளும் தரப்பிடம் கேள்விகளைத் தொடுத்தவாறிருந்த ஓர் அணி. இலங்கையின் 76 ஆண்டுகால கட்டத்தில் இவர்களை எப்போதாவது ஆட்சியமைப்பார்கள் என்று எவரும் எதிர்பார்த்ததுமில்லை.
சேகுவேரா என்ற பெயரில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக்குழுவான ஜே.வி.பி.க்கு ரோஹண விஜேவீர தலைமை தாங்கினார். அன்றைய சிறிமாவோ அரசை ஆயுதக்கிளர்ச்சியால் கைப்பற்றுவதே இதன் முனைப்பாக இருந்தது. 1971 ஏப்ரலில் இதற்கான கிளர்;ச்சி இடம்பெற்றது. பின்னர் 1987 யூலையில் ராஜிவ் - ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற பெயரில் உடன்படிக்கை ஒப்பமிட்டபோது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்றது.
ஆக, 1971ல் சிறீமாவோ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கெதிராகவும், 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சிக்கெதிராகவும் தாக்குதலை ஆரம்பித்து அரியாசனத்தைக் கைப்பற்ற ஜே.வி.பி. முனைந்து தோல்வி கண்டது. முதலாவது கிளர்ச்சியில் தென்பகுதியில் பல நூற்றுக்கணக்கான பொலிஸ் நிலையங்களைத் தகர்த்து அங்கிருந்த ஆயுதங்களை ஜே.வி.பி. கைப்பற்றியது. அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சிறிமாவோ அரசுக்கு ஆதரவு வழங்கி ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினரை கொலை செய்தது.
1987ல் உருவான கிளர்ச்சி ஜே.ஆர். அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் அதனால் பழிவாங்கப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் பெருமளவில் பொதுமக்கள். இதன்போது, ராணுவப் படையே அரசாங்கத்தை காவல் காக்கும் பணியை கையிலெடுத்தது.
இரண்டு தடவைகள் ஆயுத பலத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோல்வி கண்ட ஜே.வி.பி.யின் அரசியல் குழந்தையே அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.). ஜனநாயகத் தேர்தல் வழியாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி ஆறு மாதங்கள்கூட முடிவதற்கு முன்னர் அவர்களுக்குள் பிளவு, பிரிவு என்ற செய்திகளை எதிரணியினரே வெவ்வேறு பெயர்களில் உருவாக்கி வைத்திருக்கும் இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்க;டாக அநுர தரப்பை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்யும் வகையில் பரப்புரைகளை மேற்கொள்வதாக ஜே.வி.பி.யினர் தெரிவிக்கின்றனர்.
மார்க்சிஸ சித்தாந்த ஆட்சி நாடுகளின் நிர்வாகக் கட்டமைப்பு வழமையான கட்சி அரசியல்களைப் போன்றதல்ல. இங்கு தலைமை கிடையாது. உயர்மட்டக் குழுவொன்றே தீர்மானங்களை முடிவெடுக்கும். செயலாளர் நாயகம் என்றிருப்பவரே உயர்பீட முடிவுகளை செயற்படுத்துபவர். இவர் ஒருபோதும் மக்களால் தெரிவு செய்யப்படும் தேர்தல்களில் பங்குபற்ற மாட்டார். அமைச்சராகவும் இருக்க மாட்டார். அரச மட்டக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார். ஜே.வி.பி.யில் அந்த இடத்தில் இருப்பவர் ரில்வின் சில்வா.
அநுர குமாராவின் அமைச்சரவையில் இருப்பவர்களும் பிரதமரும்கூட ஜே.வி.பி.யின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட அபேட்சகர்கள் தெரிவும் ஜே.வி.பி.யினுடையது. வரப்போகும் உள்;ராட்சிச் சபைத் தேர்தலிலும் அவ்வாறே. இவர்கள் மீது எப்போதாவது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அதுவும்கூட உயர்பீடத்துடன் சம்பந்தப்பட்டதே.
தேசிய மக்கள் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய மாதாந்தப் படி நேரடியாக அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அது ஜே.வி.பி.யின் செயலகத்துக்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாதாந்த செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். மிகுதிப்பணம் கட்சியின் செலவுக்கானது. இதனை நிர்வகிப்பது ஜே.வி.பி.யின் மத்திய குழுவே. பொதுவுடமை நாடுகளில் இவ்வாறே நடைமுறையிலுள்ளது. இதனை புரிந்து கொள்ளாத சிலர் சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தப்படி பற்றி விமரச்சிப்பது பொதுமக்களை குழப்ப நிலைக்குத் தள்ளக்கூடியது.
கடந்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் அடக்கமாக இடம்பெற்றது. வழக்கமான வாகனங்களும், குதிரைப் படைகளும் அணிவகுப்பு எதுவுமில்லை. மிக எளிமையாக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் தனித்தனி வாகனங்களில் மோட்டார் சைக்கிள் மரியாதைப் பாதுகாப்புடன் நிகழ்வுக்கு வந்தனர். தமிழ் மக்களை ஆசுவாசுப்படுத்த, இரண்டு மணிநேர நிகழ்வின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வு எதிலும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வாவோ மற்றும் பிரமுகர்களோ சமுகமளிக்கவில்லை.
ஜனாதிபதி பதவி வழியாக அநுர குமார வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக, இலங்கையை தங்கள் கட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கான பயணங்களை முடித்துவிட்டார். இரு நாடுகளும் அவர்களுக்குள் நட்பு பேணுபவை அல்ல. ஆனால் இலங்கைக்கு அவை நட்பு நாடுகள். கேட்கும் கடனையும் கொடுக்கின்றன. வேண்டப்படும் அன்பளிப்பையும் வழங்குகின்றன. அடுத்ததாக, ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் செல்லவுள்ளார். செல்வந்த நாட்டின் வசதி ஜே.வி.பி.க்கு நன்கு தெரியும்.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் அநுர குமார நிகழ்த்திய உரைகளில் தமிழர் பிரச்சனைத் தீர்வு பற்றிக் கூறப்பட்டது. (இப்போது இதனை வடக்கின் பிரச்சனை என்று கூறி வருகிறார்). புதிய அரசியலமைப்புப் பற்றியும் அப்போது கூறப்பட்டது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபை தேர்தல்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
இவைகள் எதனையும் ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா உறுதிபடக் கூறவில்லை. அண்மைய ஊடக செவ்வியொன்றில் மாகாண சபை முறைமை ஒழிக்கப்படுமென்றே சொன்னார். 13ம் திருத்தம் பற்றி எந்த முடிவையும் ஜே.வி.பி. இதுவரை எடுக்கவில்லை. இந்த விடயங்கள் பற்றி மாற்றுக்கருத்து எதனையும் இதுவரை அநுர குமார தெரிவிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் வருட இறுதிக்குள் நடைபெறுக்கூடும் என்றவாறு பட்டும்படாமலும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் முழுமையாகப் பங்களித்த நல்லாட்சிக் கால புதிய அரசியலமைப்பு நகல் கிடப்புக்குள் போடப்பட்டுள்ளது. இதனை தூசு தட்டியெடுத்து புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுமென தேர்தல் காலத்தில் அநுர குமார தெரிவித்தது ஞாபகமிருக்கிறது. இதனை அவரே இப்போது மறந்துவிட்டார் போல் தெரிகிறது.
இந்தியாவுக்குச் சென்ற அநுர குமார இந்தியாவின் பங்கேற்புடன் ஒப்பமிடப்பட்ட 13ம் திருத்தம், மாகாண சபைகள், புதிய அரசியலமைப்புப் பற்றி எதுவும் பேசவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வருடம் தமிழர் தரப்பு பிரமுகர்களை கொழும்பில் சந்தித்தபோது, இல்லாததை கேட்பதைவிட இருப்பதை முழுமையாகப் பயன்படுத்துங்கள் என்று கூறியதை அறிந்திருக்கும் அநுர குமார இதன் பின்னர் இதுபற்றி இந்தியாவுடன் பேச என்ன இருக்கிறது.
கடந்த வார சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது தமிழர் பிரச்சனைத் தீர்வு பற்றியோ, மாகாண சபை தேர்தல் பற்றியோ மறந்தும்கூட அநுர குமார எதுவும் சொல்லவில்லை. மறுபுறத்தில் தமிழர் தரப்பில் உள்;ராட்சி மன்ற தேர்தலுக்காக பச்சை மண்ணையும் சுட்ட மண்ணையும் ஒட்ட வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
மாவை சேனாதிராஜாவின் மனஅழுத்த மரணத்தாலும், அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட அவமானத்தால் குறுகிப் போயிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைகளுக்கு எதிலும் ஈடுபாடு காட்ட முடியாத மனநிலை. இது கொழும்புக்கு மிகவும் வாய்ப்பான காலம்.
தேர்தல் காலத்தில் பாசையூரில் திரண்டிருந்த ஜனசமுத்திரத்தில் தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு என்று கூறிய அநுர குமார, கடந்த வாரம் வல்வெட்டித்துறையில் மக்கள் வெள்ளத்தில் அலைமோதியபோது பாசையூரில் கூறியவற்றை முழுமையாக மறந்துவிட்டார். சிலவேளை வல்வெட்டித்துறை கொடுத்த அதிரடித் திரட்சி காரணமாக இருந்திருக்கலாம். தமிழர் பிரச்சனையை முற்றாக மறந்துபோய் உற்சாகமாக இங்கு உரையாற்றிய இவர், கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தை மகிந்த ராஜபக்ச கட்டிய மாளிகைகளுடன் ஒப்பிட்டுப் பேசி பலத்த கரகோ~த்தைப் பெற்று தம்மையும் உலகநாயகன் ஆக்கிக்கொண்டார்.
ஒரு சந்தேகம்: வடக்கே செல்லும் அநுர குமார தமது மக்கள் சந்திப்புக்கான கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களாக இங்குள்ள கரையோரப் பட்டினங்களான பாசையூர், வல்வெட்டித்துறை ஆகியவற்றை தெரிவு செய்வதில் ஏதாவது உள்நோக்கம் உண்டா? கடற்றொழில் அமைச்சராக தமது வடபகுதி அமைப்பாளரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நியமித்ததற்கும் இதற்கும் ஏதாவது தொடர்புண்டா?
இடத்தெரிவுக்கும் அமைச்சர் பதவித் தெரிவுக்கும் அநுர தரப்பு எடுக்கும் முடிவு அவரது நுண்ணிய நகர்வில் எதனை நோக்கியது?
Post a Comment