நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழில் கைது!
அநுராதபுரத்தில் காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்.மாவட்ட சுயேட்சை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (29) மதியம் யாழ்ப்பாணத்தில் விசேட காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சனவரி 20 ஆம் திகதி அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சம்பவம் தொடர்பான உண்மைகளை அநுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
சரியான சந்தேக நபரை அடையாளம் காண்பதில் முரண்பாடு காணப்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை ஒத்திவைத்து ஜனவரி 22 ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு பிப்ரவரி 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் ரம்பேவ பிரதேசத்தில் கடமையாற்றிய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையில் காரசாரமான வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வி.ஐ.பி. விளக்குகள் எரிந்த வாகனத்தை மற்ற வாகனங்களுக்கு இடையூறாக ஓட்டிச் சென்றதால், அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.

Post a Comment