சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர அழைப்பு


இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இறுதி யுத்த காலப்பகுதியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் வாழும் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்தனர். 

 இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,  

 காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி, அதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக வாழும் உறவுகள் தொடர்ந்து போராடிவருகின்றனர். 

ஆனால் இதுவரை எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 18 ஆயிரத்துற்கும் அதிகமான உறவுகள் காணாமலாக்கப்படுள்ளனர்.  

இது தொடர்பில் பல்வேறு வகையில் வடக்கு கிழக்கெங்கும் எமது சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து எமது வலிகளை வெளிப்படுத்தியிருந்தது.

 இதே நேரம் இக்காலப் பகுதியில் நீதிவேண்டி போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர். 

 ஆனால் தீர்வு தருகின்றோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஒவ்வொன்றும் தமது இயல்பான போக்கையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றன.  

ஆனால் எமது மக்களுக்கு எதுவித தீர்வுகளோ நன்மைகளும் கிடைக்கவில்லை. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. 

 இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம். 

 இந்த எதிர்ப்பு நாளை வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். 

 எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழகம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்து தரப்பினரும் அதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துக்கொள்கின்றோம். 

 இதேவேளை மாற்றங்கள் நிகழுமென்று கூறி மாறிமாறி வந்த அரசுகளால் வேதனைகளை தவிர வேறெதுவும் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

 மாறாக சிங்கள் குடியேற்தங்களுக்கான முஸ்தீபுகளையே திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என வடக்கு கிழக்கு பெண்கள் வலையமைப்பு தலைவி ஜெயானந்தன் ஜெயச்சித்ரா குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

 இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை அடக்கு முறைகளும், அடாவடிகளுமே எமது இனத்துக்கெதிராக நடந்தேறுகின்றன.

  அதைவிட தமது இனப் பரம்பலை வட கிழக்கிலும் வலுவாக்க கடந்த அரசுகளை விட இந்த அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

 இதற்காக மகாவலி விரிவாக்கல் என்ற குறியீட்டுடன் சிங்களவர்களை குடியமர்த்த மும்மும்முரமாக செயற்படுகின்றது. 

 அதுமட்டுமல்லாது இந்த அனுர அரசும் சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளது. 

 அனுர அரசின் இந்த செயற்பாடானது கடந்த கால அரசின் கொள்கையை முன்னெடுப்பதாகவே இருக்கின்றது. அந்த வகையில் அனுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது. 

எனவே அனுர அரசின் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர நாளை கரி நாளாக கடைப்பிடிப்பதற்கு அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments