10 பில்லியன் ரூபா மோசடி: விமான நிலையத்தில் இருவர் கைது!


மலேசியாவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை நாடு திரும்பிய தம்மிக்க குமார ரணசிங்க என்ற 52 வயதுடைய நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்துள்ளது. பிரமிட் நிறுவனம் மூலமாக 10 பில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், ரணசிங்க ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்த அவரது மனைவி 42 வயதான சமுத்ரா சுரங்கனியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். கணவரின் வணிகத்தின் நிதி இயக்குநராகப் பணியாற்றிய சுராங்கனி, இந்த மோசடியில் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வந்தார்.

ரணசிங்க, குருநாகலில் வணிகப் பாடசாலை ஒன்றை நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் 2500க்கும் மேற்பட்டவர்களிடம் ஏமாற்றியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மோசடி பரிவர்த்தனைகளை நிர்வகிக்க தம்பதியினர் மூன்று பெரிய வங்கிகளில் 11 வங்கிக் கணக்குகளின் வலையமைப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அவர்களின் சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

No comments