தேசியப் பட்டியல் தெரிவில் மறைகரங்களின் சூதுவாது - பனங்காட்டான்

இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனி இடமில்லையென்று கூறிவரும் ஜனாதிபதி அநுர குமார, தெற்கிலிருந்து இனவாதம் கக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை எவ்வாறு அடக்கப் போகிறார்? பௌத்த மதத்துக்கென தனியாக ஓர் அமைச்சை நியமித்திருப்பவர் அதனைத் தவிர்த்து அனைத்து மதங்களுக்குமென பொதுவாக மதவிவகார அமைச்சு ஒன்றை ஏன் அமைக்கக்கூடாது? 

அனைவரும் எதிர்பார்த்திருந்த இரண்டு முக்கிய தேர்தல்கள் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி, புதிய நாடாளுமன்ற அமர்வும் நிகழ்ந்தேறிவிட்டது. 22 அமைச்சர்கள், 29 பிரதி அமைச்சர்கள் நியமனமாகி பதவிகளையும் ஏற்றுவிட்டனர். 

இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனி இடமில்லையென்று அடிக்கடி பொழிந்து வரும் புதிய ஜனாதிபதி தோழர் அநுர குமார தாம் சொல்வதை இன்னும் செயலில் காட்டவில்லையென்ற குற்றச்சாட்டு இப்போதே முன்வைக்கப்படுகிறது. 

22 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் தமிழர். தென்னிலங்கையின் மாத்தறையில் தெரிவான பெண்மணி ஒருவர். மற்றவர் ஜே.வி.பி.யில் முன்னர் அமைச்சராகவிருந்தவர். பெண் அமைச்சர் சிங்கள மொழியில் பதவிப் பிரமாணம் செய்ய, ஆண் அமைச்சர் தனித்தமிழில் நிகழ்த்தினார். முஸ்லிம்கள் எவரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்ற முணுமுணுப்பு காணப்படுகிறது. 

முழுமையாக ஆண்களைக் கொண்ட பிரதி அமைச்சர்களில் இருவர் தமிழர். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும் அடுத்தவர் திருமலை மாவட்டத்திலிருந்தும் தெரிவானவர். வடக்கிலிருந்து தெரிவான ஐவரில் எவருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

நாடாளுமன்ற சபாநாயகர் சிங்களவர், உபசபாநாயகர் முஸ்லிம், குழுக்களின் தலைவர் பெண்மணி ஆகிய மூவரும் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்கள். வழமையாக இவர்களில் ஒருவர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் நியமிக்கப்படுவதுண்டு. இதுவும் இம்முறை தவிர்க்கப்பட்டுவிட்டது. இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறிவரும் கட்சியில் ஏதாவது பதவிக்கு இன அடிப்படையில் இடம் கேட்டால், இனவாதத்துக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்பது பொருத்தமான பதிலாக வரக்கூடும். 

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 175 வரையானவர்கள் புதியவர்கள். அமைச்சரவையில் பேராசிரியர்கள், முனைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்துறை நிபுணர்களை காணமுடிகிறது. எதிரணியினர் முற்கூட்டியே கூறியது போன்று ஆற்றலில்லாதவர்கள் குறைவாக உள்ளது. ஆனால், அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பது குறையாக தெரியவில்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலவகை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் சொகுசு வாகனங்கள் இல்லையாம். விசேட சலுகைகள் குறைக்கப்படுகிறது. குடியிருப்பு இடங்கள் வழங்குவதில் புதிய நடைமுறைகள். நாடாளுமன்ற உணவகத்திலும் பல சலுகைகளைக் குறைக்கத் திட்டம். சம்பளம் பெறாமல் பணியாற்றுவதற்கும் பலர் முன்வந்துள்ளனர். அமைச்சர்களைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமிக்கப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

ஆரம்பம் நம்பிக்கையூட்டுவதாக இருப்பினும், இது எவ்வளவு காலத்துக்கு என்ற கேள்வி பலரிடம் எழாமல் இல்லை. பேச்சு பல்லக்கு என்ற கருத்து பரவலாக  நிலவுகிறது. அமைச்சரவை பதவியேற்பு நிகழ்விலும், நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலும் ஜனாதிபதி ஆற்றிய உரை ஆழமானது. பெரும்பான்மைப் பலத்தை அளவுக்கதிகமாக எண்ணி கண்மண் தெரியாமல் செயற்பட்டால் நிலைமை என்னாகும் என்பதை ஆலோசனையாகவும் எச்சரிக்கையாகவும் தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸவாதியான ஜனாதிபதி பௌத்த வழிபாட்டுக்குத் தலங்களுக்குச் செல்லும்போதும் பொது நிகழ்வுகளிலும் பௌத்த பிக்குகளை சந்திக்கும் வேளையில் அவர்கள் ஜனாதிபதியின் கையில் நூல் கட்டி ஆசிர்வதிக்கத் தவறுவதில்லை. அந்த நூல்கள் பின்னர் அவர் கைகளில் காணப்படுவதில்லை. ஆனாலும் தாம் ஒரு பௌத்தர் என்பதை மறவாது செல்லுமிடமெங்கும் விகாரைகளைத் தரிசிக்கிறார். 

மதவாதமற்ற ஆட்சியென்று கூறிக்கொண்டு பௌத்த சாசன அமைச்சை நிறுவி அதற்கொரு அமைச்சரையும் தனியாக நியமித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களுக்கும் இவரது ஆட்சிக்கும் இவ்விடயத்தில் மாற்றம் தெரியவில்லை. சகல மதங்களையும் சமமாக மதிப்பவராயின் - அதுதான் மதவாதமற்ற ஆட்சியெனின், பௌத்த சாசன அமைச்சு என்ற பெயரை பொதுவாக மதவிவகார அமைச்சு என்று ஏன் மாற்றக்கூடாது. இரண்டு தமிழ் அமைச்சர்களும் இதனை கவனத்தில் எடுப்பார்களா?

இனவாதத்துக்கு இடமில்லை என்பதை கொள்கையாக ஏற்றுக் கொண்டது நல்லது. அதற்காக சிறுபான்மை இனமொன்று இழக்கப்பட்ட தனது பிறப்புரிமையையும் வாழ்வுரிமையையும் மீளப்பெற கோருவதை அல்லது அதன்பால் செயற்படுவதை இனவாதம் என்று கூறி தடை செய்ய முனையக்கூடாது. மறுபுறத்தில் தெற்கிலிருந்தவாறு இனவாத நச்சுக் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வருட மாவீரர் நினைவு வணக்கம் எந்தவிதத் தடையுமின்றி இடம்பெறும் போலத் தெரிகிறது. இதனைத் தடை செய்ய பொலிசார் இதுவரை நீதிமன்றங்களின் படி ஏறவில்லை. இம்மாதம் 26ம் 27ம் திகதிகளில் இடம்பெறவிருந்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மாவீரர் நினைவு வாரத்துக்காக பின்போட்டதுகூட இன இணக்கத்துக்கான நற்குறி. இக்காலத்தில் தனியார் காணிகளிலுள்ள ராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதும் வரவேற்கப்படுகிறது. 

அடுத்த சில மாதங்களில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபை தேர்தல்களிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் தமிழர் பிரதேசத்தை முழுமையாகக் கையகப்படுத்தும் நோக்கத்துடன் இவ்வகை செயற்பாடுகள் இடம்பெறுகிறதோ என்ற ஐயம் தமிழ் மக்களிடம் இல்லாமல் இல்லை. கடந்த ஏழரை தசாப்தமாக சிங்கள தேசத்திடம் தமிழர் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களின் வெளிப்பாடு இது. 

மீண்டும் தமிழரசு மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவை நாடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழர் தரப்பு பிரிந்திருக்காது ஒன்றுபட்டு ஒரே குரலில் நிற்காதவரை எதனையும் பெற முடியாது என்பதே இந்தியாவின் பதிலாகத் தொடருகிறது. இலங்கை-இந்திய ஒப்பந்தம் பழைய கதை, அதனை இனி மறந்துவிட வேண்டுமென்று இந்திய தரப்பு ஏற்கனவே நேரடியாகக் கூறிய பின்னரும், இந்தியா 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறுவதை மட்டும்தான் தமிழர் தரப்பால் இப்போது கேட்க முடிகிறது. 

இவ்வாறான எதிலும் முடிவற்றதான அரசியல் சூழ்நிலையில் தேசியப் பட்டியல் தெரிவு என்பது தலையாய பிரச்சனையாக நிற்கிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் ரவி கருணநாயக்க நியமனமானது கட்சிக்குள் முரண்களை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைவருக்குத் தெரியாது தம்மி~;டப்படி தாம் விரும்பிய ரவி கருணநாயக்கவை கட்சிச் செயலாளர் தேசியப்பட்டியலில் நியமித்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இதுவரை ஒருவர் மட்டுமே தேசியப் பட்டியலில் நியமனமாகியுள்ளார். மிகுதி இடங்கள் நிரப்பப்படவில்லை. பத்துக்கு மேற்பட்டவர்கள் இதற்குப் போட்டி. ஒரு பெண்மணியை நியமிக்க சிலர் விரும்புகின்றனர். மனோ கணேசனுக்கு இடம் வழங்கப்பட வேண்டுமென கேட்கப்படுகிறது. இவரை நியமிக்காவிடின் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர்கூட இல்லாது போகும் நிலை இன்றையது. (ஏற்கனவே கண்டி மாவட்டம் தமிழர் ஒருவர் தெரிவாகாத பிரதேசமாக மாறிவிட்டது)

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவான ப.சத்தியலிங்கம் தொடர்பான பல செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் படுதோல்வி கண்ட சுமந்திரனின் சகாவாக மட்டுமன்றி அவரது வழிநடத்தலில் சத்தியலிங்கம் இயங்குவதால் இவர் மீதான சந்தேகம் வீடுக்குள் அதிகரித்து வருகிறது. 

விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையின் முதல்வர் பதவி, அல்லது வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குமிடத்து, சத்தியலிங்கம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடக் கூடுமென்றும், அதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு சுமந்திரனை தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்படலாமெனவும் பரவலாக பேசப்படுகிறது. 

தேர்தல் சட்டத்தின்படி கட்சி ஒன்றின் செயலாளரே இவ்வாறான தெரிவுகளிலும் நியமனங்களிலும் ஒப்பமிட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பும் தகுதி பெற்றவர் என்ற நிலையில், தமிழரசு கட்சியின் செயலாளராக சத்தியலிங்கம் செயற்படுவதால் கட்சியில் வேறு எவருக்கும் தெரியாது இவர் சுமந்திரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்ற அச்சம் பலராலும் பகிரங்கமாக முன்வைக்கப்படுகிறது. 

ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் அறிவிக்காது ரவி கருணநாயக்கவை தேசியப் பட்டியல் எம்.பியாக அதன் செயலாளர் ஆணையாளருக்கு அறிவித்ததை உதாரணமாகக் கொண்டு, சத்தியலிங்கம் - சுமந்திரன் உறவாடலை உள்வீட்டுக்காரர்கள் நோக்குகின்றனர். 

''மூக்கு உள்ளவரை சளி போகாது' என்ற தெனாலிராமன் கதை போல உள்ளது தமிழரசுக் கட்சியில் உள்ள அந்த ஒருவரின் மறைகர செயற்பாடுகள்.  

 

No comments