அறுதிப் பெரும்பான்மை சைக்கிளிற்கு கிடைக்காவிட்டால் ஆபத்து!
நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக்கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்காவிட்டால் அனுர குமார திஸாநாயக்க சொல்லும் வகையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் அங்கே ஏற்படும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சமஸ்டி ஆட்சியை பற்றி பேசுவதற்கோ நடைமுறைப்படுத்துவதோ ஒருபோதும் இடமில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதே போல் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தபோவதில்லை என்ற தொனியில் கருத்து தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக்கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்காவிட்டால் அனுர குமார திஸாநாயக்க சொல்லும் வகையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் அங்கே ஏற்படும். அதைத் தான் தேசிய மக்கள் சக்தி துணிந்து எதிர்பார்க்கிறது.
ஆகவே தெற்கில் மக்கள் எந்தவகையில் ஒரு ஆணையை வழங்கி இருக்கிறதோ அதே அளவுக்கு அல்லது அதை விட பலமான ஆணையை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்குவதன் மூலம் தெற்கில் பெறப்பட்ட ஆணையை வைத்து வடக்கில் உள்ள மக்களின் ஆணையை மிதித்து உதாசீனம் செய்ய முடியாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம்.
மற்றவர்கள் ஏற்கனவே தேசிய மக்கள் சக்தி விரும்புகின்ற ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு , தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முதலே அவர்கள் இணங்கி விட்டார்கள். ஆகவே நாங்கள் மட்டும் தான் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டுக்கொடுக்காத முழுமையான சமஷ்டியை வலியுறுத்துகின்றோம்.
எங்கள் அணிக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்காமல் வேறு தரப்புக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்கினால் நிலைமை மோசமாகும். அதேவேளை எமக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து தென்னிலங்கை எமது நிலைப்பாட்டை ஏற்காதுவிட்டால் தம் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் அரசியல் நிலையை உருவாக்குவோம்.
போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாட்டைத் தவிர சமஷ்டி தீர்வுக்கோ அதிகாரப் பகிர்வுக்கோ தயாரில்லை. அவர்கள் தனி நாட்டை மட்டுமே கோரினர். இதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என கூறி போரை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்தியது. இலங்கை அரசு சமஷ்டி வழங்க தயார். ஆனால் விடுதலைப் புலிகள் தான் தடையாக உள்ளார்கள் என்ற கருத்தில் விடுதலைப் புலிகளை நிராகரித்து போரை வெற்றிகரமாக முடிக்க சர்வதேசம் துணைபோனது.
போரில் இல்லாத நிலையில் தமிழ் மக்களின் விருப்பம் சமஷ்டியாக இருக்கும்போது, அதை மிகப்பலமாக 15 ஆண்டுகளாக மக்கள் ஆணை வழங்கும்போது அதே ஆணையை நவம்பர் 14ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்படுமாக இருந்தால் தளம்பல் நிலையில் ஒரு தேசம் இருக்குமானால் அந்த தீர்மானத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படும்.
தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக நேர்மையாக பேசக்கூடிய தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே காணப்படும் நிலையில் சிங்கள தேசத்துக்கு சமாந்தரமாக தமிழ் தேசமும் அங்கீகரிக்கப்படும் வகையில் சமஷ்டி தொடர்பாக பேசுவோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பலமான ஆணை வழங்கியும் உதாசீனம் செய்யப்படுமாக இருந்தால் தமிழ் மக்களின் கருத்துக்களை ஜனநாயக முறையில் அறியும் சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் - என்றார்.
Post a Comment