வீட்டைச் சிதைத்து தமிழினத்தை அழிக்கும் ஒட்டகத்துக்கு கருங்குறியிடும் நாளில் தமிழரின் ஒற்றைக் குரலாக சங்கே முழங்கு! பனங்காட்டான்


ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஒரு கதிரை இச்சையால் தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்கச் சபதம் பூண்டு, தமிழரசுக் கட்சியை நிர்மூலமாக்கி வருபவரை அடையாளம் காட்டுவதற்கான நாள் செப்டம்பர் 21. இந்நாளே, தமிழ்த் தேசியத்தை எண்திசையும் எடுத்துச் செல்லும் ஏகோபித்த சின்னமாக விளங்கட்டுமென சங்கே முழங்கு. 

நாடு முழுவதுமுள்ள மக்கள் ஊர் ஊராகத் திரண்டு ஒரு தேரை இழுக்கும் பெருந்திருவிழாக் காலம் இது. சிங்கள மக்களின் அனைத்து நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கவென சிங்கள பௌத்தர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவதற்கான தேர்தல் வாரம் இது. 

கடந்த ஒரு மாதமாக மூன்று பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகியோரிடமிருந்து எக்கச்சக்கமான வாக்குறுதிகளை கேட்டாயிற்று. இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மேலும் என்னென்னவோ உறுதிகளைத் தெரிவித்துள்ளன. 

தினமும் இதனூடாக பயணிக்கும் ஒருவரால் வெல்லப்போவது யார் என்ற குழப்ப நிலையில் மனநலம் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். சஜித்துக்கும் அநுரவுக்குமிடையே கடும் போட்டி என்று ஒரு செய்தி வரும். ரணிலும் அநுரவும் ரகசிய ஒப்பந்தம் என்று இன்னொரு செய்தி கூறும். ரணிலின் வெற்றியை ஆமையும் முயலும் கதையுடன் ஒப்பிட்டு மற்றொரு செய்தி தெரிவிக்கும். எல்லாமே சிதம்பர சக்கரம்தான். இதற்கிடையே நாமலையும் ஊடகங்கள் அவ்வப்போது தடவிப் பார்க்கின்றன.

இந்த மாதம் 21ம் திகதி சனிக்கிழமை தேர்தல் நாள். ஒரு கோடி எழுபது லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2019 ஜனாதிபதித் தேர்தலைவிட இம்முறை பதினேழு லட்சம் அதிகரித்துள்ளது. மொத்தம் 13,417 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்களிப்போர் தம்முடன் கைத்தொலைபேசியை சாவடிக்குள் எடுத்துச் செல்ல முடியாது. 18ம் திகதி இரவுடன் பரப்புரைக் கூட்டங்கள் நிறைவுபெறும். 

கட்டுப்பணம் செலுத்திய 38 பேரில் 19 பேரைக் காணவில்லையென்று சொல்லப்படுகிறது. இவர்கள் தமக்கான பாதுகாப்பையும் இதுவரை கேட்கவில்லை. தங்களுக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்கை இன்னொருவருக்கு பெற்றுக் கொடுக்கும் பினாமி வேட்பாளர்கள் இவர்கள். 

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி ஏற்பவர் அடுத்து வரும் பத்து அல்லது பன்னிரண்டு நாட்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஆனால், இது கட்டாயம் என்றில்லை. (அநுர குமார திசநாயக்க தாம் ஜனாதிபதியானால் மறுநாளே நாடாளுமன்றத்தைக் கலைப்பேன் என்று கூறுவது வெறும் பேச்சு மட்டுமே). 

ஜனாதிபதித் தேர்தலில் வழக்கம்போல சிங்களவர் ஒருவரே வெற்றி பெறுவார். சிங்கள பௌத்தர்களின் வாக்குகளைவிட பல சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் அங்குமிங்குமாகக் கிடைக்கும். இவர்களுள் தமிழர் தாயகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களின் வாக்குகளும் அடங்கும். 

ஆனால், தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் இவர்களுக்கு வாக்குகள் கிடைத்தன. முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982ம் ஆண்டு இடம்பெற்றபோது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். அப்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 81,45,000 வரையானது. இதில் சுமார் 66 இலட்சம் வரையானவர்களே வாக்களித்தனர். அப்போது குமார் பொன்னம்பலம் 1,75,000 வரையான வாக்குகள் பெற்றிருந்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாவது இடத்தில் 87,263 வாக்குகள் இவருக்குக் கிடைத்தன. சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஹெக்டர் கொபேகடுவவும், ஐக்கிய தேசிய கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இங்கு முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 999 மேலதிக வாக்குகளால் ஜெயவர்த்தன முதலிடத்துக்கு வந்தார். இங்கு குமார் பொன்னம்பலத்துக்கு 47,095 வாக்குகள் கிடைத்தன. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மாவட்டங்களில் குமார் பொன்னம்பலத்துக்கு 1,200க்கும் மேலான வாக்குகள் இடப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இவருக்கு வாக்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எம்.கே. சிவாஜிலிங்கம் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தன்னிச்சையாகப் போட்டியிட்ட வேளையிலும் 22 மாவட்டங்களிலும் இவர் வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த விடயங்களை இங்கு குறிப்பிடுவதற்கான முக்கிய காரணம் இப்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் மட்டும்தான் வாக்குகள் கிடைக்குமென்ற சிலரது தப்பான அபிப்பிராயத்தை நீக்கவே. 

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு பல வருடங்களாக முளைவிட்ட போதிலும் இந்த வருடத்திலேயே அதற்கு உருவம் கொடுக்கப்பட்டது. அப்போது பலரும் இதனை ஒரு பகிடிக் கதையாகவே கருதினர். உது சரிப்பட்டு வராது என்றும் சிலர் கூறியதுண்டு. உங்களால் ஒரு பொதுவேட்பாளரை கண்டுபிடிக்க முடியுமா என்று ரணில் விக்கிரமசிங்க தம்மிடம் கேட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். ரணிலின் இந்தக் கேள்வி தமிழரின் ஒற்றுமை இன்மையை நையாண்டி பண்ணும் வகையிலானது. தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்தும் இவ்வகையான கருத்து பரவலாக விதைக்கப்பட்டு வந்தது. 

தமிழரசுக் கட்சியின் எம்.பியான சுமந்திரனுக்கு தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டுமென ஒரு நப்பாசை இருந்திருக்கிறது. சரிந்து போகும் தமது செல்வாக்கை தூக்கி நிறுத்தவும், சிங்கள சமூகத்தின் முன்னால் தம்மை ஒரு தமிழ்த் தலைவராக பிம்பம் காட்டவும் அவர் விரும்பியிருக்கிறார். அதனாற்தான் பொதுவேட்பாளராக தம்மைப் போட்டியிடுமாறு சுரே~; பிரேமச்சந்திரன் கேட்டதாக ஒரு கதையை மெதுவாக அவிழ்த்துவிட்டார். ஆனால், சுரே~; பிரேமச்சந்திரன் முகத்தில் அடித்தாற்போல அதனை மறுத்தவுடன் சுமந்திரன் கப்சிப் என வாயை மூடி விட்டார். ஆனால், அதற்காக அவர் சும்மா இருக்கவில்லை. 

தமிழ்ப் பொதுவேட்பாளர் சரிவராது, சிங்களவர் ஒருவருக்கே தமிழரசு ஆதரவு வழங்கும், தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடித்தே தீருவேன், இது தமிழரசுக் கட்சிக்கான பெரும் பொறுப்பு என்று பொதுவெளியில் அறிவிக்கவும் தொடங்கினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவரே தமிழ்ப் பொதுவேட்பாளராக களம இறங்குவாரென சுமந்திரன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளின் தெரிவில் நாடாளுமன்ற அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் திரு. அரியநேத்திரன். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு (தேசியப் பட்டியலால் அல்ல) வெற்றி பெற்றவர். ஓர் ஊடகவியலாளர். பிசகில்லாத தமிழ்த் தேசிய பற்றாளர். இதனாலேயே இவர் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக தொடர்ந்து தெரிவானவர்.

இதனை எள்ளளவும் தாங்க முடியாத சுமந்திரனும், சாடிக்கேற்ற மூடியாக விளங்கும் சாணக்கியனும் இணைந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பது என்ற செயற்பாட்டில் தமிழரசுக் கட்சியையே அழிக்க முனைந்து வருகின்றனர். தமிழர் தேச அரசியலில் ஒட்டகம் என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப்படுபவர் சுமந்திரன். தமிழரசுக் கட்சியை அழித்து நிர்மூலமாக்கும் இலக்குடன் கொழும்பிலிருந்து இவர் இறக்கப்பட்டவர் என்பதை இவரது செயற்பாடுகள் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

முழுத்தமிழினத்தையும் கூறு போட்டு தமிழரசுக் கட்சியை சின்னாபின்னமாக்கி தமது சிங்கள எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பணியில் சுமந்திரன் பொதுவேட்பாளரை எதிர்த்து வருகிறார். எந்தவிதமான எழுத்து ஒப்பந்தங்களும் இல்லாது ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பதென அவர் எடுத்த முடிவு தமிழரசுக் கட்சியை அழிவின் முடிவுக்குக் கொண்டு செல்கின்றது. 

தன்னிச்சையாக தான் எடுத்த முடிவை நிலைநிறுத்துவதற்கு அடுத்தடுத்து பல பொய்களை கூறி வருகிறார். தமிழரசின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரித்தானியா சென்றிருந்த சிவஞானம் சிறீதரன் எம்.பி. தமிழ்ப் பொதுவேட்பாளரை தாம் ஆதரிக்கும் முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார். கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மூத்த துணைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் எவரும் விரும்பியவாறு வாக்களிக்கும் உரிமையை வெளிப்படுத்தினார். கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்ட கட்சிக் கிளைகள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தங்கள் தீர்மானத்தை இங்கு மீண்டும் எடுத்துக்;கூறின. ஆனால், சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, சஜித்தை ஆதரிக்கும் முடிவு கூட்டாக எடுக்கப்பட்டதென்று அறிவித்து சஜித்துக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இந்த அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு கடந்த வாரத்தில் ஐவர் கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தமது முடிவை சிவஞானம் சிறீதரன் மீண்டும் இங்கு வலியுறுத்தினார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித்தை ஆதரிக்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வாரத்தில் இன்னொரு தடவை கூடி முடிவெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. நிலைமை இப்படியிருக்க கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சுமந்திரன், கடந்த வார ஐவர் கூட்டத்தில் சஜித்தை ஆதரிப்பதை சிறீதரன் எம்.பியும் ஏற்றுக் கொண்டதாக இன்னொரு பொய்யைக் கூறினார். இதனை உடனடியாகவே சிறீதரனும் மாவை சேனாதிராஜாவும் மறுத்துள்ளனர். 

2005 ஜனாதிபதித் தேர்தலை பகி~;கரிப்பதென எடுத்த முடிவினூடாக ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தவர்கள் விடுதலைப் புலிகள். சஜித் பிரேமதாசவின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை விடுதலைப் புலிகளே கொலை செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. அப்படியானால் அதன் காரணமென்ன? தமிழர் தாயக பூமியில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த விகாரைகளை கட்டப்போவதாக அறிவித்த சஜித் பிரேமதாசவை தமிழர்கள் எவ்வாறு ஆதரிக்கப் போகின்றனர்? தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் போட்டியிடும் அநுர குமார திசநாயக்கவின் ஜே.வி.பி. முன்னைய மகிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் சேர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை நிர்வாகத்தை நீதிமன்றம் ஊடாக இல்லாமற் செய்தது. 

கடந்த வருடம் வடக்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு தமிழ் எம்.பி. சுமந்திரன். நல்லாட்சிக் காலத்தில் ரணிலின் சட்ட மாஅதிபரென புகழப் பெற்றவர் சுமந்திரன். இப்போது ஏதோ ஒன்றுக்காக தமிழரின் வாக்குகளை புரட்டிக் கொடுத்து சஜித்தை ஜனாதிபதியாக்க துடித்துக் கொண்டிருப்பவரும் இவரே. 

சில மாதங்களுக்கு முன்னர் ஊடகச் செவ்வி ஒன்றில், ஷதேவைப்படின் அமைச்சர் பதவியையும் ஏற்கத் தயார்| என்று கூறிய சுமந்திரன் அதற்கான காலம் இதுதான் என்று எண்ணுகிறார் போலும் என கொழும்பின் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும்போல் தெரிகிறது. 

தமிழரின் தேசிய அடையாளமாக போட்டியிடும் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தோல்வியடையச் செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், விடப்படும் சவால்களுமே அவருக்கான வாக்குகளை சேகரிக்கும் படிக்கற்கள். அரியநேத்திரனை பதம் பார்க்க முனையும் சுமந்திரனுக்கு தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் தீர்ப்பளிக்கும் நாள் செப்டம்பர் 21. 

ஒரேயொரு வாக்கு தமிழரின் பலத்தை நிரூபிக்கும். இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எவருக்கும் வழங்காது ஒரேயொரு வாக்கை மட்டும் அரியநேத்திரனுக்கு வழங்குவது காலத்தின் கட்டாயம்.

No comments