நாம் இலங்கைப் பிரஜைகள்:எண்ணம் தேவையாம்!
அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடையே இன்றிரவு உரையாற்றியுள்ள அவர் அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் "நாம் இலங்கைப் பிரஜைகள்" என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.
தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.
பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.
Post a Comment