தமிழரசு பிளவு பகிரங்கம்!



ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தீர்மானித்த நிலையில் கட்சி பகிரங்கமாக பிளவுண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டன் சென்றுள்ள அவர், கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை விடுத்து சஜித் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாத நிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னதாக சஜித் ஆதரவு தீர்மானம் தொடர்பில் ஏதும் தெரியாதென மறுதலித்த மாவை சேனாதிராசா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டும் என்று இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு நேற்று எடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை, எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் ஆகிய மூன்று தீர்மானங்களையும் ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம்." – என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்..


No comments