பேரம் பேசிப்பேசியே சோரம் போவதைவிட தமிழ்த் தேசிய குறியீடாக போட்டியிடுவது தவறா? பனங்காட்டான்


தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே தாம் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் பாக்கியசெல்வம் அரியநேந்திரன், பொதுவேட்பாளராகத் தெரிவாகும்போது இவர் சார்ந்த தமிழரசுக் கட்சி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டில் எந்த ஒரு முடிவையும் எடுத்திருக்கவில்லை. ஆதலால், இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்று எவரும் குற்றஞ்சாட்டுவது பொருந்தாது. இதனைப் புரிந்து கொள்ள மறுத்து தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் சிங்கள தேச அரசியலின் ஏஜன்டுகளாகவே மக்களால் பார்க்கப்படுவார்கள். 

''இப்படியும் நடக்கிறது'' பத்தியை எழுதும் ஊர்க்குருவி ஏதாவது ஒரு குட்டிக் கதையுடன் அதனைத்  தொடங்குவது வழக்கம். அதுபோல இன்றைய இப்பத்தியையும் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு குட்டிக் கதையுடன் ஆரம்பிப்பது பொருத்தம். 

'ஓர் ஊரில் ஒருவன் எப்போதும் புலி வருகுது புலி வருகுது என்று சொல்லி மற்றவர்களை அச்சப்படுத்திக் கொண்டேயிருப்பான். இதனை நம்பும் மக்கள் கிலி பிடித்து ஓடுவர். ஆனால் புலி வராது. இப்படிப் பல நாட்கள் இவன் செயல் அமைந்திருந்தது. ஆனால் ஒரு நாள் புலி உண்மையாகவே வந்துவிட்டது. புலி வராது என்று நினைத்தவர்கள் ஏமாந்தனர்" என்பதுவே கதை. 

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது அடிபடத் தொடங்கிய காலத்திலிருந்து பலரும் இது சரிவராது என்றே எண்ணியிருந்தனர். முக்கியமாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஓரிருவருக்கு இதுவே வாய்ப்பாடாக இருந்தது. இவர்கள் சொல்வதை நம்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை கண்டுபிடிப்பது சாத்தியப்படாது என்றவாறு சொன்னது ஞாபகமிருக்கிறது. 

புலி உண்மையாகவே வந்த கதை போன்று தமிழ்ப் பொதுவேட்பாளர் வந்துவிட்டார். பொதுவேட்பாளரை மூர்க்கத்தனமாக எதிர்த்து, சிங்களத் தரப்புக்கு சாமரை வீசிக் கொண்டிருக்கும் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிலிருந்து, அதன் மத்திய குழுவைச் சேர்ந்த பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறங்கியுள்ளார். இதிலுள்ள இன்னொரு சிறப்பு அம்சம், வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரியநேந்திரன் வேட்பாளராக தெரிவாகியிருப்பதுவே. 

தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான மேலும் பல விடயங்களை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம். அதற்கு முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பல மாற்றங்களை நோக்குவது அவசியம். 

இதனை எழுதும்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுள் 13 பேர் சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராயுள்ள போதிலும் அவரும்கூட சுயேச்சையாகவே போட்டியிடுகிறார். தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரனும் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார். இந்த மாதம் 14ம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தலாம் என்பதால் 27 எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. 

இதுவரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவர்களுள் நாமல் ராஜபக்சவே வயதில் குறைவானவர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் எம்.பிக்களுள் ஒருவர். ராஜபக்ச குடும்ப இளவரசராக தம்மை முன்னிறுத்தி அரசியல் செய்து வருபவர். 

இம்முறை போட்டியிடுபவர்களில் நாமலும், சஜித்தும் முறையே முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணசிங்க பிரேமதாச ஆகியோர்களின் புதல்வர்கள். ரணில் இப்போது ஜனாதிபதியாக இருப்பவர். ஏற்கனவே இரு தடவை ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்டவர். சஜித்தும் ஒரு தடவை போட்டியிட்டு தோல்வியுற்றவர். 1982ல் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்த ரோகண விஜேவீரவின் ஜே.வி.பி. அணியின் வேட்பாளராக அனுர குமார திசநாயக்க இத்தேர்தலில் போட்டியிடுகிறார். 

1970ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியபோது, வயதில் மிகக்குறைந்த எம்.பியாக தெரிவானவர் மகிந்த ராஜபக்ச. மகிந்தவின் தந்தை டி.ஏ.ராஜபக்ச அம்பாந்தோட்டை எம்.பியாகவும், அமைச்சராகவும் இருந்தவர். இந்த அரசியல் பின்னணியை நாமலுக்கான மேலதிக தகைமையாக அவரது தரப்பினர் பார்க்கின்றனர். 

அதேசமயம், அறகலய போராட்டத்தின்போது இளவயதினருக்கு இடமளிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை தாங்கள் நிறைவேற்றியிருப்பதாக பெரமுனக்காரர்கள் சொல்வது வேடிக்கையான கதை. ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றே அறகலய போராட்டம் இடம்பெற்றது என்பதையும், ஜனாதிபதி கோதாவிலிருந்து பெறாமகன் நாமல்வரை பதவிகளை துறந்தனர் என்பதையும் இரண்டு வருடத்துள் பொதுமக்கள் மறந்துவிட்டனரென இவர்கள் நினைக்கிறார்கள் போலும். 

ரணிலை எதிர்த்து மொட்டுச் சின்னத்தில் பெரமுன போட்டியிட வேண்டுமெனவும், வேட்பாளராக தாமே நிறுத்தப்பட வேண்டுமெனவும் நாமல் ராஜபக்ச தமது வீட்டுக்குள்ளும் கட்சிக்குள்ளும் போராடி வந்தவர். ஆனால், காலநிலை அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. கோடீஸ்வர சூதாட்ட வணிகரான தம்மிக்க பெரேராவையே பெரமுன நிறுத்த விரும்பியது. இறுதி நேரத்தில் அவர் பின்வாங்கி விட்டார். பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கு பெரமுன அழைப்பு விடுத்தது. அவர் தமது ஆதரவை ஏற்கனவே ரணிலுக்குத் தெரிவித்து விட்டார். விஜேதாச ராஜபக்சவையும் பெரமுன நாடியபோதும் அவரும் மறுத்துவிட்டதாக தகவல். வேறு எவரும் இல்லாத நிலையிலேயே நாமல் ராஜபக்ச தெரிவானார் என்று துணிந்து கூறலாம்.  இவரது சிறிய தந்தை பசில் ராஜபக்ச, பெரமுன செயலாளர் சாகர காரியவாசம் ஆகியோர் நாமலை நியமிப்பதில் முன்னணியில் நின்றவர்கள். 

வேட்பாளராக நாமல் தெரிவானதில் தந்தையான மகிந்தவுக்கு முழுமையான விருப்பமில்லை. வேறு வழியின்றி சம்பிரதாயமாக மகனை அணைத்து வாழ்த்தினாரானாலும் இத்தேர்தலில் நாமல் வெற்றி பெறுவாரென அவருக்கு நம்பிக்கை இல்லை. பெரமுனவின் நூறு வரையான எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவு ரணில் பக்கம் இருப்பதால் நாமலின் வெற்றி வாய்ப்பு இறங்குமுகமாய் உள்ளது. முக்கியமாக இவரின் தாயார், இளைய சகோதரர் இருவர் ஆதரவாக இல்லையென்பது ஊடகங்கள் ஊடாக வெளிச்சமாகியுள்ளது. 

தமிழர் தரப்பு ஆதரவு ராஜபக்சக்களுக்கு எவ்வாறு இருக்குமென்பதை சொல்லத் தேவையில்லை. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு தமிழ் மக்கள் ஆதரவாக வாக்களித்ததானது, தமிழினப் படுகொலை புரிந்த ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டது. இத்தேர்தலில் அதே தமிழினப் படுகொலையாளிகளின் வாரிசாக நாமல் போட்டியிடுகிறார். இதனைப் புரிந்து கொண்டே நாமலை தமக்கான போட்டியாளராக ரணில் பார்க்கவில்லை. 

நாமல் இம்முறை வெல்வது சிரமமானது. ஆனால், ஐந்தாண்டுகளின் பின்னர் வரவிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான விதையாகவும், உரமாகவும் இதனை அவர் எண்ணுவதாக தெரிவித்துள்ள சிங்கள ஊடகமொன்று, தமது காலுக்குப் பொருத்தமற்ற செருப்பை அவர் அணிந்திருப்பதாக நையாண்டி பண்ணியுள்ளது. அடுத்த மாதம் 21ம் திகதி தேர்தல் நடைபெறும்வரை இது தொடர்பான மேலும் பல விடயங்களை நோக்கலாம். 

பொதுவேட்பாளர் தெரிவில் சசிகலா ரவிராஜின் பெயரும் அடிபட்டது. ஆனால், சுயேட்சைக் குழுவிற்கான சில நிபந்தனைகளுக்கு இவர் பொருத்தமாக அமையவில்லையாதலால் கைவிட நேர்ந்தது. இறுதியில் கொழும்பு சட்டவாளர் தவராஜாவும் மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி. அரியநேந்திரனும் தெரிவுப் பட்டியலில் நின்றனர். திரு. தவராஜாவுடன் உரையாடிய பின்னரே தாம் போட்டியிட முன்வந்ததாக அரியநேந்திரன் தெரிவித்திருப்பது இருவருக்குமிடையில் சிண்டு முடிய முனைந்தவர்களை ஓரந்தள்ளிவிட்டது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய கூட்டணியை உருவாக்கியபோது அதற்குள் உள்வாங்கப்பட்ட முதலாவது பட்டியலில் இடம்பெற்ற அரியநேந்திரன் ஓர் ஊடகவியலாளர். தமிழ் அலை என்ற பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தவர். 2004, 2010ம் ஆண்டுப் பொதுத்தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியாகத் தெரிவானவர். தமிழ்த் தேசியத்தை நெஞ்சார ஏற்று அப்பாதையில் தொடர்ந்து பயணித்து வருபவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர். கொள்கைப் பற்றாளர் என நன்கு அறியப்பட்டவர். இவைகளை நன்கு பரிசீலித்ததற்கு பின்னரே தமிழ்ப் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்கானதல்ல. நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இவருக்கே வாக்களித்தாலும் ஜனாதிபதியாக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். 'தமிழ்த் தேசியத்துக்கான குறியீடாகவே ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். நான் வெறும் அடையாளம் மட்டுமே" என்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அரியநேந்திரன் குறிப்பிட்டிருப்பது தெளிவான அவரது தேசியக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. 

இதனை புரிந்து கொள்ளாத சிலர், இவருக்கு எத்தனை வீத வாக்குகள் கிடைக்கும், முன்னைய தேர்தல்களில் இவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்று கணக்குகளை காட்டி மக்களை குழப்ப முயல்கிறார்கள். 

அரியநேந்திரன் பொதுவேட்பாளராகத் தெரிவாகும்போது அவர் சார்ந்த தமிழரசுக் கட்சி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டில் எந்த ஒரு முடிவையும் எடுத்திருக்கவில்லை. ஆதலால், அவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்று எவரும் குற்றஞ்சாட்ட முடியாது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் புதிதாக தலைவராகத் தெரிவான சிறீதரனும் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்கள். சுமந்திரன், சாணக்கியன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோரே இதனை எதிர்த்து வருபவர்கள். 

இன்று ஆகஸ்ட் 11ம் திகதி தமிழரசுக் கட்சி இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுக்குமென அறிவித்துள்ளது. வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர் தாயகம் என்னும் கொள்கையில் செயற்படும் அரியநேந்திரன் இதன் உறவுப்பாலமாகவும் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவும் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்மாறாக இயங்குவோர் எவராயினும் சிங்கள தேசத்தின் அரசியல் ஏஜன்டுகளாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுவர். இது தவிர்க்க முடியாதது. 

No comments