ஒரு தலைவரின் மறைவின் முன்னரும் பின்னரும்.....! பனங்காட்டான்


அரசியலில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் தம்மை ஏமாற்றிய சிங்களவர்களையும், தம்மை இழுத்து வீழ்த்த முனைந்த உள்வீட்டுக்காரர்களையும் மன்னித்தாரா? தமது மறைவின் பின்னர் தம்மை வைத்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றிப் பிழைக்கப்போகும் வேடதாரிகளை அவர் முற்கூட்டியே அறிந்திருப்பாரா? இக்கேள்விகளுக்கான பதிலைப் பெற காத்திருக்கும் காலம் நீண்டு செல்லாது.  

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், 2001ல் உருவான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் முன்னர் கடமையாற்றிய திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் நீண்டகால உபாதையின் பின்னர் கடந்த மாதம் 30ம் திகதி இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இயற்கையானார். 

கொழும்பில் மலர்ச்சாலை ஒன்றிலும், நாடாளுமன்ற வளாகத்திலும் மரியாதை அஞ்சலிக்காக இவரது திருவுடல் வைக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்பட்டு தமிழரசுக் கட்சி தலைமைப் பணிமனையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் திருமலை எடுத்துச் செல்லப்பட்டு மத அனுட்டானங்களைத் தொடர்ந்து திருவுடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ் ஊடகங்களுக்கு பழக்கப்பட்டுப் போன மொழியில் இதனைக் குறிப்பிடுவதானால், அன்னாரின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது என்று சொல்ல வேண்டும். 

1933ம் ஆண்டு பிறந்த சம்பந்தன் 1956ல் தமது 23வது வயதில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து, சத்தியாக்கிரகம் போன்ற தமிழீழ வரலாற்று நிகழ்வுகளில் பங்குபற்றியவர். வழக்கறிஞரான இவர் என்ன காரணத்தினாலோ தெரியாது 1960, 1965 தேர்தல்களில் போட்டியிட இணங்கவில்லை. 

1972ல் தமிழரசும், தமிழ் காங்கிரசும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவான பின்னர் இடம்பெற்ற 1977ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர். 1983 இனப்படுகொலையைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு நிறைவேற்றிய ஆறாம் திருத்தத்தின் பிரகாரம் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்த கூட்டணி எம்.பிக்கள் தங்கள் பதவிகளை இழந்தபோது அவர்களில் ஒருவரானவர் சம்பந்தன்.

ஆனால், 1989 மற்றும் 1994ம் ஆண்டுத் தேர்தல்களில் திருமலையில் இவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. 1997 யூலையில் திருமலை மாவட்ட எம்.பியாக இருந்த அ.தங்கத்துரையின் கொலையை அடுத்து அந்த வெற்றிடத்துக்கு இவர் நியமனமானார். எனினும், 2000ம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் போராட்டக் குழுக்களையும் இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற ஐந்து பொதுத்தேர்தல்களிலும் இவருக்கு வெற்றி கிடைத்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக இவர் நியமிக்கப்பட்டதாலேயே இவரால் நாடாளுமன்றம் போக முடிந்தது என்பது வரலாற்றில் பதிவான குறிப்பு. 

ஒருவர் மரணமடைந்த பின்னர அவரது வாழ்வின் நற்பக்கங்களையே முன்னிறுத்த வேண்டுமென்பது பொதுப்பண்பாடு. அதேசமயம் விடுதலையை வேண்டி நிற்கும் ஓர் இனத்தின் அரசியல் தலைமையை ஏற்ற ஒருவரின் செயற்பாடுகளை எவ்வேளையிலும் காய்தல் உவத்தலின்றி ஆய்வதும் பகிர்வதும் வரலாற்றுக் கடமை. 

அந்த வகையில் சம்பந்தன் அவர்களின் சுமார் ஐந்து தசாப்த (1977-2024) கால அரசியல் நோக்கையும் போக்கையும் கணிக்க வேண்டிய தேவை இங்குள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது போன்று இவர்கள் இருவரும் 1977 தேர்தல் ஊடாகவே நாடாளுமன்றம் புகுந்தவர்கள். இருவரும் அரசியலில் வெவ்வேறு காலங்களில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர்கள். 

தமது பெரிய தந்தையார் முறையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு கடைசியாக பலத்த தோல்வியை சந்தித்த பின்னர் தமது யுக்தியால் ரணில் ஜனாதிபதியாகியுள்ளார். மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்து அரசியலிலிருந்து ஓய்வுபெறும் எண்ணத்திலிருந்த சம்பந்தனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினூடாக மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள் விடுதலைப் புலிகளென அவ்வேளையில் தமிழ் ஊடகமொன்றின் கட்டுரை குறிப்பிட்டது நினைவிலுள்ளது. 

சம்பந்தனின் மறைவுக்கு உள்நாட்டிலும் இந்தியாவிலிருந்தும் பலர் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அநேகமாக எல்லோருமே இவரை தமிழர் அரசியலின் ஆணிவேர், மூலவேர், ஆளுமை, தனித்துவ தலைவர், ஒரு சகாப்தத்தின் முதல்வர் என்று கூறியிருப்பது அரசியல் நாகரிகம் கருதும் வழமையான சொல்லாடல்கள். ஆனால் ரணிலினதும், மனோ கணேசனினதும் அறிக்கைகள் இவ்விடயத்தில் ஆழமாக கவனிக்க வேண்டியவையாக அமைந்துள்ளன. 

ரணிலின் வார்த்தைகள் பின்வருமாறு அமைந்துள்ளன: 'சம்பந்தன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார். ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும்போது, 'ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்தபோது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்" என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார். அப்போது தாம் பிறக்கவேயில்லை என்று குறிப்பிட்ட ரணில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக சம்பந்தன் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்றும் அதற்குப் போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன் என்றும் தொடர்ந்து தெரிவித்திருந்தார். 

சம்பந்தனின் மறைவின் பின்னர் ரணில் சுட்டிக்காட்டியிருக்கும் இவ்விடயங்கள், அதற்கான வார்த்தைகள் வஞ்சகப் புகழ்ச்சியானவை என்றே நோக்க வைக்கிறது. சம்பந்தனைப் புகழ்வதுபோல் புகழ்ந்து அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார் என்று குறிப்பிட்டிருப்பது உண்மையாக இருப்பின் சம்பந்தன் இரட்டைக் கொள்கையுடன் இயங்கினாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

1977ம் ஆண்டு தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் போட்டியிட்டு அமோக ஆசனங்களைப் பெற்ற வேளையிலேயே சம்பந்தனும் அவர்களுள் ஒருவராக நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர். ஆனால் ரணில் சம்பந்தனை எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியவர் என்று குறிப்பிடுவது உண்மையல்ல. முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட 2009ன் பின்னர் சம்பந்தனின் நிலைப்பாடு ரணில் சொல்வதாக இருந்திருக்கலாம். ஆனால், ஷஎப்போதும்| என்று ரணில் குறிப்பிட்டிருப்பது சம்பந்தன் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமற் செய்யும் வஞ்சக நோக்குடையது. 

இவ்விடத்தில் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்திருக்கும் கருத்து ரணிலின் சுயரூபத்தை அப்படியே வெளிக்காட்டுவது. 'ரணிலால் மோசமாக ஏமாற்றப்பட்டவர் சம்பந்தன்" என்று சொன்னதோடு மட்டும் நிற்காது சம்பந்தனை நாற்பது, ஐம்பது வருடங்களாக தங்களுக்குத் தெரியும் என்றும் இனி பலர் வந்து வாயளப்பார்கள் என்று மனோ கணேசன் சொன்னதை கடந்த ஒரு வாரமாக காண முடிந்தது. 

நாலரை வருட நல்லாட்சிக் காலத்தில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு புதிய அரசியலமைப்பு வருகிறது என்று கூறி சம்பந்தனை ரணில் ஏமாற்றியதையே மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கிறார். சம்பந்தனை ரணில் ஏமாற்றினார் என்றால் அதில் சுமந்திரன் பெரும் பங்கு வகித்தவர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இவ்விடயத்தில் தரகர் போலவிருந்து ரணில் மீதான நம்பிக்கையை சம்பந்தனுக்கு ஊட்டியவர் சுமந்திரன் என்பது புதிய தகவல் அல்ல. 

மனோ கணேசனின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தமது அஞ்சலியில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். 'அடுத்த ஜனாதிபதியும் ஏமாற்றுவதற்கு முன்னர் சம்பந்தன் காலமாகி விட்டார்" என்பது இவரது கருத்து. சுமந்திரன் எதிர்பார்க்கும் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச என்பதை மனதில் நிறுத்தியே அரியநேந்திரன் இக்கருத்தைக் கூறியிருப்பாரென எண்ணத் தோன்றுகிறது. அதாவது அடுத்த ஜனாதிபதியாக சஜித் வந்தாலும் இனப்பிரச்சனைக்கு அவரால் தீர்வு தர முடியாதென்பதே இதன் அர்த்தம். 

சம்பந்தனின் இறுதி மரியாதை நிகழ்வுகள் பற்றி பல விமர்சனங்கள் வந்துள்ளன. ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கை நிகழ்த்த சம்பந்தனின் அரசியல் வாரிசு என தம்மை எண்ணிக் கொண்டவர் முயன்றாராயினும் சம்பந்தனின் குடும்பத்தினர் அதனை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அரசாங்க பங்களாவில் வசித்து வந்தவருக்கு ராணுவ மரியாதை வழங்குவதில் தவறென்ன என்றும் ஓரிரு குரல்கள் எழுந்துள்ளன. 

கொழும்பிலிருந்து வீதி வழியாகவே சம்பந்தனின் திருவுடலை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல இருந்ததாயினும், அவ்வாறு நிகழுமாயின் கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பி.யின் செல்வாக்கு அதிகரித்து விடுமென எண்ணியே அதனை விமானம் மூலம் எடுத்துச் செல்ல முடிவானதாகவும் ஒரு தகவல். இவ்விடயங்கள் பற்றி தமிழக பிரமுகர் வழக்கறிஞர் ராதாகிரு~;ணன் சில தகவல்களை தமது முகநூலில் குறிப்பிட்டிருப்பதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. 

'முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்ய முடியாதிருப்பதன் காரணமாக சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும்" என  சுமந்திரன் தொலைக்காட்சி செவ்வியொன்றில் கடந்த வருடம் தெரிவித்த விடயம் மிகப் பிரபலமானது. இதனை நேரடியாகவே சம்பந்தனிடம் இவர் தெரிவித்தபோது, 'எனது உடல்நிலையைத் தெரிந்து கொண்டும் திருமலை மக்கள் என்னைத் தெரிவு செய்தார்கள். எனவே பதவி துறக்க வேண்டிய தேவை இல்லை" என்று முகத்தில் அடித்தாற்போல் சம்பந்தன் சுமந்திரனிடம் கூறியிருந்தார். 

சுமந்திரனின் விருப்பத்தை வழிமொழிவது போல் கனடாவிலிருந்து இறக்கப்பட்ட சண்முகம் குகதாசன் மற்றொரு தொலைக்காட்சிச் செவ்வியில், 'ஐயாவுக்கு காது கேட்காது, சரியாக உரையாட மாட்டார், தொலைபேசியில் நாங்கள் சொல்வது அவருக்குப் புரியாது" என்று தங்கள் தலைவரை நையாண்டி பண்ணியதும் உலகறிந்த விடயம். 

இப்போது இவர்கள் இருவரதும் விருப்பத்தை இயற்கை நிறைவேற்றி விட்டது. சண்முகம் குகதாசன் ஐயாவின் இடத்துக்கு எம்.பி.யாகி விட்டார். (ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் இப்பதவி ஆகக்கூடியது மாதக்கணக்காக இருக்கலாம்.) சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராக போட்டியின்றி நியமனமாவதற்கு எத்தனிக்கலாம். தமிழரசுக் கட்சி வெளியேறிய பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ரெலோ மற்றும் புளொட்டின் வசமாகி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகி விட்டது. இதன் தலைமைப் பதவி சுமந்திரனுக்கோ, குகதாசனுக்கோ கிடைக்காது. 

அரசியலில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் தம்மை ஏமாற்றிய சிங்களவர்களையும், தம்மை இழுத்து வீழ்த்த முனைந்த உள்வீட்டுக்காரர்களையும் மன்னித்தாரா? தமது மறைவின் பின்னர் தம்மை வைத்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றி பிழைக்கப்போகும் வேடதாரிகளை அவர் முற்கூட்டியே அறிந்திருப்பாரா? இக்கேள்விகளுக்கான பதிலைப் பெற காத்திருக்கும் காலம் நீண்டு செல்லாது.  

No comments