அதானியை கைவிடமுடியாது:இலங்கை அரசு
இந்திய அதானி குழுமத்தின் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலான முதலீட்டு திட்டங்களை கைவிடமுடியாதென இலங்கை அரசு தெரிவித்துள்ளது.திட்டம் தொடர்பில் சுற்றுச்சூழல் கவலைகள் முன்வைக்கப்படுகின்ற போதும் திட்டத்தை கைவிடமுடியாது என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி மாவட்டங்களில் அதானி காற்றாலை மின் திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ‘வெளிப்படைத்தன்மை இல்லாமை’ ஆகியவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை ஆற்றலுக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட இடம் என்றும், அதனால் எந்த விடயத்திலும் சமரசம் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த பறவைகளின் பாதைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மூலம் இலங்கையில் திட்டங்களை அமைப்பதில் இந்தியாவின் அதானி குழுமம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
திட்டங்களில் மன்னார் நகரம் மற்றும் பூநகரிப் பகுதிகளில் மொத்தமாக 484 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அடங்குகின்றன.
அவ்வகையில் 52 காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, அடிப்படை ஆய்வு குறித்த பொது கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டிற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
Post a Comment