போதைக்காக மூலிகை விதைகளை உட்கொண்ட 07 மாணவர்கள் வைத்தியசாலையில்


பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில்  மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடிகளின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை மாணவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு  தெரியப்படுத்தி யதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன்  சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்டதையடுத்து 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள்  மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments