அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றாவாளி என அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமத்தப்பட்ட மூன்று கூட்டாட்சி துப்பாக்கி விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
12 டெலவேர் ஜூரிகள் அடங்கிய குழு சுமார் மூன்று மணி நேர விவாதத்திற்குப் பிறகு தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2018ஆம் ஆண்டு, டெலாவேரில் உள்ள துப்பாக்கி விற்கும் கடையில் கோல்ட் கோப்ரா கைத்துப்பாக்கியை வாங்கியதாக ஹண்டர் பைடன் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், சட்டவிரோத போதை பொருளை அவர் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும் போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதை பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என 3 முறைப்பாடுகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கியை வாங்க வேண்டுமானால் சரியான தகவல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பைடனின் மகன் தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் ஒருவர் குற்றவாளியாக இருப்பது இதுவே முதற்தடவை.
சட்டவிரோத போதை பொருளுக்கு அடிமையாக இருந்த சமயத்தில் கை துப்பாக்கியை வைத்திருந்ததாக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் டெலாவேர் ஃபெடரல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹண்டர் பைடன் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
நீதிபதி தண்டனைக்கான தேதியை நிர்ணயிக்கவில்லை, ஆனால் அது வழக்கமாக 120 நாட்களுக்குள் நடக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார்.
Post a Comment