தமிழ் மக்களின் சாபத்தினாலையே நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது


இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட எம் மக்களின் சாபம் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பாராளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் தேசத்தின் கடன் மறுசீரமைப்பு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் அங்கீகாரம் வழங்கி இந்நாட்டின் மக்களாக ஏற்று அவர்களுக்கான தீர்வினை வழங்காத மட்டும் இந்நாட்டிற்கான விடிவு காலம் என்பது வராது என்பதனை உறுதியாக கூறிக் கொள்கின்றேன். விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியும் கூட இன்றளவிலும் எம்மக்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இனவாத செயற்பாடுகள் தொடந்தும் எம் மக்களுக்கு ஏதிராக பல வழிகளிலும் இடம்பெறுகின்றது.

பாராளுமன்றத்தில் முக்கியமாக தேசத்தின் கடன் மறுசீரமைப்பு, தேசத்தை கட்டி எளுப்புவது தொடர்பான பல விடயங்கள் பல தரப்பினராலும் பேசப்படுகின்றன. வேடிக்கையான விடயம் என்னவெனில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல பெரும் பங்கு வகித்த வெளிவிவகார அமைச்சர் கூட நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் பேசுவதாகும். 

இலங்கை இவ்வாறு இந் நிலைக்கு உள்ளாகியதன் காரணம் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948ம் ஆண்டிலிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நடந்த ஒவ்வொரு அநீதிகளுமே இந் நாட்டிற்கான சாபக்கேடாகும். இந் நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பிராயச்சித்தம் செய்யும் வரையும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வுகளை வழங்கும் வரையும், இந் நாட்டிலே “தமிழ் ஒரு தேசிய இனம்” இனமென்ற அங்கீகாரம் வழங்கும் வரை இந் நாட்டினைக் கட்டியெழுப்புவதென்பது ஒரு கனவாகவே மக்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் காணப்படும் என மேலும் தெரிவித்தார். 


No comments