புலிகளை முடக்க ராஜீவ் உடன்பட்டார்:மணி சங்கர் ஜயர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் 'நான் அறிந்த ராஜீவ்' (The Rajiv I Knew) என்ற நூல்,
ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே," என தெரிவித்துள்ளது.அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. "அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது," என்று கூறப்பட்டிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் இந்நூல் கூறுகிறது. "ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்," என்று மணி சங்கர் அய்யர் தனது புத்தகத்தில் கூறுகிறார்.
இதுகுறித்து மேலும் பேசும் இந்த நூல், ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜீவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது, என்கிறது.
"பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது," என்கிறது இப்புத்தகம்.
இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் தில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார். அந்த வீடியோ அதன்படியே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
"இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்திலிருந்தே ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆரம்பக் கட்டச் சேதங்களுக்குப் பிறகு, ராணுவம் சுதாரித்துக்கொண்டாலும் இது பேரழிவாகவே அமைந்தது. ஆரம்பத்தில், இந்திய அமைதி காக்கும் படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த வரவேற்பில் இணைந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்," என்கிறார் மணி சங்கர் அய்யர்.
"இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும் இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றிருப்பதாக இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது," என்கிறார் மணி சங்கர் அய்யர்.
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எவ்விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ, வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை, என்கிறார்.
"அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து புலிகளுக்கும் அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டம் இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதி காக்கும்படை, தமிழ்ப் போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட - கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்னாமாக மாற்றியது," என்கிறார் மணி சங்கர் அய்யர்.
Post a Comment