அரசியல் புறோக்கர்கள் தேவையில்லை:மாணவர் ஒன்றியம்!
மீண்டும் நல்லாட்சி கால பேரம் பேசும் அரசியல் வியாபாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் குதித்துள்ள நிலையில் பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் பலத்த முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் ‘தேர்தல் களத்தினை நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை.
தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல்,போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல்,வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல்,அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல,பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல்,. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல்.
அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல் ஆகியவற்றை மாணவர் ஒன்றியம் முன்னிறுத்தியுள்ளது.
ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லையெனவும் மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment