தமிழரின் அரசியல் வேணவாவை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்க பொதுவேட்பாளர் உதவாதா? பனங்காட்டான்


1982 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பகடுவவுக்கு கிடைத்த வாக்குகள் அந்தக் கட்சிக்கானவை அல்ல. வெங்காயம் - மிளகாய்க்கான நன்றி உணர்வின் வெளிப்பாடு. இத்தேர்தலில் இங்கு குமார் பொன்னம்பலத்துக்கு இங்கு கிடைத்த வாக்குகள் அவரை முதலாம் இடத்துக்குக் கொண்டு வந்ததோடு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் ஒரு பொதுவேட்பாளரால் தமிழரின் அமோக வாக்குகளை ஏன் பெறமுடியாது? 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்வரை இதுவே பெருமளவுக்கு ஊடகங்களை நிரப்பும் விடயதானமாக இருக்கப் போகிறது. இந்த வருட ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் பெறுவதற்கு இரண்டு காரணிகள் பிரதானமாக உண்டு. 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அந்தக் கதிரையை தம்முடன் தக்க வைப்பதற்கு எடுத்துவரும் தீவிர முயற்சி ஒரு காரணம். அடுத்ததாக, தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டுமென்ற கருத்து பரவலாக ஆராயப்படுவதும் பேசப்படுவதுமாகும். 

முன்னர் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுவேட்பாளர் ஒருவர் தமிழர் தரப்பிலிருந்து போட்டியிடாததால், இது தேவைதானா? இது சாத்தியப்படுமா? வெற்றிபெற முடியுமா என்று பல கேள்விகள் எழும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

ஒட்டுமொத்த தமிழர்களும் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவரால் ஜனாதிபதியாக முடியாது, அப்படியானால் எதற்காக போட்டியிட வேண்டுமென்று சிங்கள தேச அரசியல் கட்சியின் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நியாயமான கேள்விதான். ஆனால், தனது அறியாமையை இதனூடாக அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இதுவரை நடைபெற்ற எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தாது, சிங்கள வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களித்து வந்தனர். இவர்களின் வாக்களிப்பு முறை ஒருவகையில் புதுமையானது. அதாவது, குறிப்பிட்ட கட்சியினரை அல்லது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக அவரை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு வாக்களிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமையால் இது உருவானது. 

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தோல்வி அடைந்தமைக்கு தமிழ் மக்கள் அந்தத் தேர்தலை புறக்கணித்ததே காரணமாக அமைந்தது என்பது வரலாற்றுப் பதிவு. ஆக, சிங்கள வேட்பாளர்களின் ஜனாதிபதிப் பதவிக்கான வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இதுவரை இருந்தார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. 

இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் தமிழ் மக்கள் சில முக்கியமான நிகழ்வுகளை விரைவாக மறந்துவிட்டு, ஏற்றுக் கொள்ள முடியாத பரப்புரைகளில் சிக்குப்பட்டு மீண்டும் திசைமாறிச் செல்வதை சுட்டிக்காட்டுவதற்காகவே. 

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அனுர ஆகிய மூன்று பெரும்பான்மை இனத்தவர் போட்டியிடுவது நிச்சயமாகியுள்ளது. பின்னைய இருவரும் தத்தமது கட்சிகளின் தலைமையில் போட்டியிடுகின்றனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மட்டும் இதில் விதிவிலக்கு. 

கடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மூலவேரோடு சரித்து விழுத்தப்பட்டது. ரணிலும் தோல்வியடைந்தார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய தேர்தல் முறைமையின் கீழ் கிடைத்த தேசிய பட்டியல் வழியாக ஒற்றை ஆசனத்துக்கு ரணில் எம்.பியாக நியமனமானார்.

பின்னர் இடம்பெற்ற அறகலய போராட்டம், ராஜபக்சக்கள் அனைவரும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தது, கோதபாய நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாடொன்றில் தங்கியிருந்தவாறு ஜனாதிபதிப் பதவியை துறந்தது, அவரால் பிரதமராக நியமனம் பெற்ற ரணில் விக்கிரமசிங்க குருட்டு அதிர்ஸ்டத்தினால் ஜனாதிபதியானது என்பவை பழங்கதைகளல்ல. நிகழ்கால வரலாறு. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்றவாறான பெறுபேறைப் பெற்றவர் ரணில். 

அந்த அதிர்ஸ்டத்தை தமக்கேயுரித்தான நரி விளையாட்டினால் நிரந்தரமாக்க அவர் முனைகிறார். பிரதான கட்சிகளைப் பிரித்து தமக்கான ஆதரவைப் பெருக்கி வரும் இவர், இறுதியாக தம்மை ஜனாதிபதிக் கதிரையில் காப்பாற்றி வரும் பொதுஜன பெரமுனவில் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இவ்விடயத்தில் அவர் வெற்றி பெறும் அனுகூலம் காணப்படுகிறது. 

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென விரும்புகிறார். இதனை நேரடியாக ரணிலிடம் தெரிவித்தும் உள்ளார். ரணிலின் தாய்மாமனார் ரஞ்சித் விஜேவர்த்தனவினால் (ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் றுவான் விஜேவர்த்தனவின் தந்தை) நடத்தப்படும் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் கடந்த வாரக் கட்டுரையின் பிரகாரம் பசில் ராஜபக்ச ரணிலுடன் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் பற்றி உரையாடி வருவது தெரிய வந்துள்ளது. ஆனாலும் இவ்விடயத்தில் பசிலினால் வெற்றி பெற முடியவில்லை. பெரமுனவின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்து விட்டேன் - இனி ரணிலே முடிவெடுக்க வேண்டும் என்ற பசிலின் கூற்று இனி எல்லாமே ரணிலின் முடிவுதான் என்பதை வெளிப்படுத்துகிறது. 

மகிந்த, நாமல் ஆகியோரின் மாற்றுத் திட்டங்களுக்கு இடமளிக்காது ரணில் முன்னேறி வருகிறார். பெரமுனவைச் சேர்ந்த பன்னிரண்டு அமைச்சர்கள் ரணில் பக்கத்துக்கு செல்ல தயாராகியுள்ளனர் என்ற தகவல் பெரமுனவின் பலவீனத்தை காட்டுகிறது. இப்போதுள்ள நிலையில் ரணில் மொட்டுச் சின்னத்திலா யானைச் சின்னத்திலா போட்டியிடுவார் என்பது மட்டுமே இனி முடிவு செய்யப்பட வேண்டியது. இவர் பொதுச் சின்னத்திலேயே போட்டியிடுவாரென்று ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகின்றனர். 

இதிலும் ரணிலின் கை ஓங்குமானால் - புலிகள், ஈழம் என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து சிங்கள வாக்குகளை அபகரித்து வந்த பெரமுனவுக்கு ரணில் பெரிய நாமம் போட்டு விடுவார். தெற்கின் இந்தப் பின்னணியிலேயே தமிழர் தரப்பு பொதுவேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பார்க்க வேண்டும். 

அகில இலங்கை தமிழரசுக் கட்சி என்பது சுருங்கி ஒடுங்கி தமிழர் தாயகத்திலேயே ஒரு கட்சியாக இயங்க முடியாத நிலைக்கு வந்துள்ளது. இப்போது யார் தலைவர், யார் செயலாளர் என்பது தெரியாது மக்கள் திண்டாடுகின்றனர். இதன் ஆதரவுத் தளம் சரிவு நிலையில் உள்ளது. கட்சியை இந்த நிலைக்குத் தள்ளிவிட்ட பெருந்தலைவர் கொழும்பில் அரச மாளிகையில் சொப்பன சுகத்தில் காணப்படுகிறார். இவரால் கட்சிக்கு இழுத்துவரப்பட்ட சுமந்திரன் கொழும்புப் பிரமுகர்களோடு சகவாசம் செய்து வருகிறார். 

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் இருக்க வேண்டிய தமிழரசின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கட்சியை நெறிப்படுத்தி வழிப்படுத்த வேண்டிய பணியைத் தவறவிட்டு, பொதுவேட்பாளர் விடயத்தில் ஏற்படக்கூடிய பாதகங்கள் என்று ஒரு பட்டியலை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவேட்பாளர் என்பது சாத்தியப்படாது என்ற கருத்தை சுமந்திரனுக்கு முன்னராக தாமே கூறியதாகச் சொல்லி பெருமைப்படுவது வேறு. கட்சியின் தலைவரென சொல்லப்படும் மாவையர் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. 

அனுரவின் கனடா கூட்டத்தில் பங்குபற்றிய ஒருவர் புலம்பெயர் நாடொன்றின் சமூக ஊடகத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றிக் கூறிய கருத்து இவ்விடத்தில் முக்கிய கவனிப்புக்குரியது. 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டார். அப்போது குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக அவரது உறவினரும் சுதந்திரக் கட்சி ஆட்சியில் காணி, விவசாய அமைச்சராகவுமிருந்த ஹெக்டர் கொப்பகடுவ போட்டியிட்டார். யாழ்ப்பாணத்தில் ஹெக்டர் கொப்பகடுவவுக்கு ஜே.ஆரை விட கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இது தேசிய அரசியலில் பங்கேற்க தமிழ் மக்கள் விரும்புவதை எடுத்துக் காட்டியதாக அந்தப் பிரமுகர் தனது சொந்தக் கருத்தாகத் தெரிவித்திருந்தார். 

குறிப்பிட்ட அந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பகடுவவுக்கு 77,300 வாக்குகள் கிடைத்திருந்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு 44,780 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சிறீமாவோவின் ஆட்சிக் காலத்தில் (1970-1977) மிளகாய், வெங்காய இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டதால் அதனை சாதகமாக்கிய யாழ்ப்பாண விவசாயிகள் - அரமமலையஅயயமய இளம் விவசாயிகள் வெங்காயம், மிளகாயை பயிரிட்டு லட்சாதிபதியானார்கள். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்குமென சிறீமாவோ நம்பினார். அது பொய்க்கவில்லை. அதனாலேயே ஜே.ஆரிலும் பார்க்க ஹெக்டர் கொப்பகடுவவுக்கு சுமார் 30,000 மேலதிக வாக்குகள் கிடைத்தன. இந்த வாக்குகளை பலரும் வெங்காய - மிளகாய் வாக்குகள் என்று வர்ணி;த்தனர். 

இதற்கும் அப்பால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் பெற்று முதலிடத்துக்கு வந்தவர் குமார் பொன்னம்பலம். இவர் தமது தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவே போட்டியிட்டிருந்தார். இவருக்கு தமிழரசுக் கட்சியினர் ஆதரவு வழங்காத போதிலும், அமோக வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழ்த் தேசியத்துக்குக் கிடைத்த வாக்குகளாகவே கொள்ள வேண்டும். இந்தச் சாதனையை அந்த ஊடகத்தில் கருத்துத் தெரிவித்த பிரமுகர் தேவை கருதி பக்குவமாக மறைத்துவிட்டார். 

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தத் தேர்தலில் ஜே.ஆருக்கு 48,084 வாக்குகளும், குமார் பொன்னம்பலத்துக்கு 47,095 வாக்குகளும் கிடைத்தன. 999 வாக்குகளால் மட்டுமே குமார் பொன்னம்பலம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த மாவட்டம் தமிழர்களின் எண்ணிக்கையைவிட சிங்கள மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டது, இங்கு சுதந்திர கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பகடுவவுக்கு 21,688 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 

இலங்கையின் 22 மாவட்டங்களிலும் குமார் பொன்னம்பலத்துக்கு வாக்குகள் கிடைத்தன. நாடளாவிய ரீதியில் 1,73,428 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்துக்கு குமார் பொன்னம்பலம் வந்தது 1982ம் ஆண்டில் பெரும் சாதனையாக அமைந்தது. 

இதனூடாக எழும் கேள்வி, இன்றைய அரசியல் சூழ்நிலையில் - 1982ன் பின்னர் நாற்பது ஆண்டுகளைத் தாண்டி இடம்பெறப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் முன்னரிலும் பார்க்க அதிகூடிய வாக்குகளை பெறமுடியாதா என்பதுவே. 

தமிழர்கள் ஒற்றுமைப்பட மாட்டார்கள் எனத் தமிழர்களே கூறிக்கொண்டு, அதனையே நிலைநாட்ட முயற்சிப்பார்களானால் தமிழர்களால் ஒருபோதுமே அரசியல் பேரம் பேச முடியாது போகும். தேர்தலை பகி~;கரித்ததால் அன்று ரணில் தோற்கடிக்கப்பட்டார் என்பது உண்மையென்றால், தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டி ஓர் அணியில் ஒருவரை நிறுத்தி தமிழரின் அரசியல் அபிலாசைகளை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும். இது, தமிழரின் ஒன்றுபட்ட ஒற்றை உரிமைக்குரலாக அமையும். 

தேர்தலின் முடிவு தோல்வி என்பதை தெரிந்து கொண்டே போட்டியிட்டாலும் அதன் மூலம் சர்வதேச அரங்கில் தெரியப்படுத்தும் தமிழரின் உரிமைக் குரல் பெருவெற்றியாகும். தமிழரின் ஒன்றுபட்ட அரசியல் வேணவாவை எடுத்துக் கூறுவதற்கு தேர்தல் தோல்வி முட்டுக்கட்டையாக இருக்காது. 

இதனை எதிர்ப்பவர்களுக்கு ரஜினிகாந்த் குரலில் ஒரு வாய்மொழி: குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. 

No comments