சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை மனித உரிமை பேரவையை நாடவுள்ளது


உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களாகியுள்ள போதிலும் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் இந்த தாக்குதலின் பின்னால் உள்ள  சதிமுயற்சிகள் என்ன என்பது போன்ற விடயங்களை முன்னைய தற்போதைய அரசாங்கங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டன.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற தனது வாய்மூல வாக்குறுதியை  நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவறிவிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றவேளை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார். அவ்வேளை கொழும்பிற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன்  பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றவேளை  தனது கடமைகளை நிறைவேற்றாமல்  வெறுமனே தகவல்களை கொண்டு செல்பவராக காணப்பட்டார் என உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவர் தற்போது பொலிஸ்மா அதிபராக பதவி வகிக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் எவராவது நீதியை எதிர்பார்க்க முடியுமா என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments