தொழில் போட்டி:பார்களை திறக்க தடை

 


மதுவரி சட்ட விதிகளுக்கு முரணான வகையில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


இதன்போது எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


தற்போது சட்டத்திற்கு முரணான வகையில் முறைசாரா வகையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்தார். சில அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது மதுவரி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகளும் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இதன்படி மதுவரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை மீறி மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments