வளைவு ஆபத்தானது: இலங்கை காவல்துறைமுழங்காவில் மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் உள்ள வளைவு ஆபத்தாதென இலங்கை காவல்துறை கண்டறிந்துள்ளது.

பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது முழங்காவில் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக பேணப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு குடும்பங்களால் தற்காலிக வளைவு ஒன்று துயிலுமில்ல நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வளைவினை அகற்றுமாறு முழங்காவில் காவல்துறை பொறுப்பதிகாரி அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றார்.

இலங்கை முப்படைகளதும் காவல்துறையினரதும் சட்டவிரோத கட்டடங்கள் பலவும் குவிந்துள்ள நிலையில் சாதாரண வளைவு எத்தகைய நெருக்கடியை தருகின்றதென குடும்பங்கள் கேள்வி எழுப்புகின்றன.

இந்நிலையில் குறித்த வளைவை அகற்ற பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு பணிப்பு விடுக்குமாறு கோரி முழங்காவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றை நாடியுள்ளார். 

இதனையடுத்து நாளை வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராக பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டவிரோத மணல் வியாபாரத்திற்கென சொந்தமாக கனரக வாகனங்களை கொண்டுள்ளதாக காவல்நிலைய அதிகாரிகளிற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் பகிரங்க முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments