சுண்ணக்கல் கடத்தல் தொடர்கின்றது



யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத்தனமாக திருகோணமலையில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

“காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களமோ அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்துள்ளது.

அதேநேரம் பூநகரி பொன்னாவெளியில் தொடர்புடைய சீமெந்து தொழிற்சாலையே    சுண்ணக்கல் அகழ முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments