ரணில் காணி பெமிட்டும் வழங்குவாராம்!
ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் நடவடிக்கையில் 278 ஏக்கர் நிலப்பரப்பு அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.
இதில் 5 கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்படவுள்ளது
ஜே- 244 வயாவிளான் கிழக்கு ,
ஜே-245 வயாவிளான் மேற்கு,
ஜே-252 பலாலி தெற்கு ,
ஜே-254 பலாலி வடக்கு,
ஜே-253 பலாலி கிழக்கு
ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணி விடுவிக்கப்படவுள்ளதுடன் காணி உரிமையாளர்களின் விபரங்களும் பதியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இக்காணி விடுவிப்பின் போது பலாலி சித்திவிநாயகர் வித்தியாசாலையும் இராணுவக்கட்டுப்பாட்டிலிருந்து மீளும் சாத்தியம் உள்ளது.
அச்சுவேலி -வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் ஜனாதிபதியின் வருகையின் போது மீள்குடியேற்ற காணி விடுவிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அரச காணிகளில் வசிப்போருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களம் உருவாக்கிய மென்மொருள் அங்குரார்ப்பணம், மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சிகிச்சைப் பிரிவில் அவரச சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ஐந்து சத்திரசிகிச்சைக் கூடங்கள், சிறுநீரக நோயளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு பிரிவு, சி.ரி. ஸ்கானிங் உட்பட்ட கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு நோயாளர்கள் தங்கும் விடுதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

Post a Comment