சத்தியலீலாவுக்கு டக்ளஸின் பதில் என்ன?

 


மரணதண்டனையை எதிர்பார்த்துள்ள பெண் அரசியல் கைதி சத்தியலீலா விடுதலை உள்ளிட்ட "தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம்(22) ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் பிரச்சினைகளில் அவசரமாகவும் , அவசியமாகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாக , காணி விடுவிப்பு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை உள்ளிட்டவை உள்ளன.

கடந்த 29 ஆண்டு காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 29 ஆண்டுகாலமாக சிறைகளில் கொடூர தண்டனைகளை அனுபவித்து வரும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, அவர்களை தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.

அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த போது சத்திய லீலா எனும் தமிழ் அரசியல் கைதிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவு என மேன் முறையீடு செய்யப்பட்டு, மேன் முறையீட்டு விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட வேண்டும் என கோரி இருந்தோம். அவ்வேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடன் இருந்தார். தாம் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதாகவும், அமைச்சர் தான் அவரை மன்னித்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

எனவே சத்திய லீலாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறோம் எனவும் கோமகன் தெரிவித்துள்ளார்.


No comments