உண்ணாவிரதம் உண்மையே!
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுளளனர்.
எனினும் அவ்வாறு உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவில்லையென இலங்கை சிறைச்சாலை நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்த நிலையிலேயே சட்டத்தரணிகள் நேரில் இன்று பயணித்து போராட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் (12.03) உத்தரவு பிறப்பித்தது.
அதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமக்கான நீதி வழங்கக்கோரி அவர்களில் 5 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது.
கைது செய்யப்பட்ட எட்டுபேரில் ஆலய பூசாரியார் த.மதிமுகராசா, மற்றும் து.தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு, அரசாங்கத்திற்குப் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெறவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

Post a Comment