திடீரென முளைத்துள்ள புத்தர்: போராட அழைப்பு!



யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் திடீரென முளைத்துள்ள புத்தர் சிலைக்கு எதிராக போராட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி உள்ளுர் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திடீரென முளைத்துள்ள புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளுர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கலின் பின்னணியில் படையினரது பங்கெடுப்புடன் புத்தர் சிலைகள் நிறுவப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயக்காணிகள் விடுவிப்பு தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments