வெள்ளை அண்ணர் காலமானார்


கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த வெள்ளை அண்ணர் என்று அழைக்கப்படும் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஐயா அவர்கள் கடந்த சனிக்கிழமை

(23.03.2024) அன்று காலமானர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அந்தோனிப்பிள்ளை தந்தையாருடன் எட்டு வயதில் கிளிநொச்சி  வந்து பரவிப்பாஞ்சானில் தமது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அவரது சூழல் தொடர்ந்து கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் வழங்காததால் பாடசாலைக் கல்வியில் நீண்ட தூரம் செல்லமுடியவில்லை. ஆனால் அவரது வாழ்வில் சமூகத்தின் மீது அவருக்குள்ள பற்றும் பாசமும் அவர் ஒரு படிக்காத மேதை என்பதைப் பறைசாற்றி நிற்கிறது. 1978 ஆம் ஆண்டு முதல் இலங்கை சமாதான நீதவானாக தனது பணியைத் தொடங்கினார். அவர் தமிழர் தேசத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு அவரை ஒரு மகத்துவமான மாமனிதராக்கி நிற்கிறது.

அன்பான பேச்சு, கனிவான பார்வை, வசீகரமான சிரிப்பு, எளிமையான வாழ்வு அவரது தனி அடையாளம். அவர் "வெள்ளை அண்ணர்" என்ற பெயரிலேயே நன்கறியப்பட்டவர். அது அவரணியும் ஆடையினால் வந்த பெயர் என நினைத்தால் அது எவ்வளவு சிரிப்புக்கு இடமானது என்பதை அவருடன் பழகியவர்கள் மட்டுமே அறிவர். சில மனிதர்களுக்கு மட்டுமே பெயரும் வாழ்வும் பொருத்தமாகின்றது. இதற்கு வெள்ளை அண்ணர் விதிவிலக்கில்லை. 

கிளிநொச்சியின் முழுமையான வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும் இவரது வாழ்வும் வரலாறும். பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் தன்னை ஒரு தொண்டனாக ஈடுபடுத்தி அரும்பணியாற்றிய இவரது வரலாற்றைக் குறிப்பாக கிளிநொச்சி மக்கள் நன்கறிவர். இவர் பங்குகொள்ளாத சமூகப் பணிகளே இல்லை எனலாம். கிளிநொச்சி வைத்திய சாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காந்தி நிலையம், மகாதேவ ஆச்சிரமம், முதியோர் இல்லம், பல்வேறுபட்ட ஆலயத் திருப்பணிகள், பல்வேறுபட்ட போராட்ட கால நம் இன இடப்பெயர்வுகள், குறிப்பாக யாழிலிருந்து வன்னி நோக்கிய இடப்பெயர்வு, வன்னிக்குள் இடம்பெற்ற உள்ளக இடப்பெயர்வுகள், சுனாமிப் பேரிடர், தமிழின அழிப்புக்கு நீதி கேட்டல் என அனைத்து மக்கள் நலப் பணிகளிலும் இணைத்து அண்ணர் முன்னின்று ஆற்றிய அளப்பெரிய பணிகளைச் சுட்டிக்காட்டலாம்.

சமாதான நீதவானாக இருந்து தனது பங்கினை தமிழர் இன அழிப்பை சர்வதேச மயப்படுத்தி நீதியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிக்கு முழுமையாகப் பங்காற்றினார். அவரது பணியின் கனதியை விடுதலைப் புலிகளின் சில பொறுப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும் எனலாம்.  தேச விடுதலையோடு இவர் விடுதலைப் புலிகளுடன் நீண்டகாலம் பயணித்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பவுண் தங்கம் வாங்குவதற்கு முன்னரே 1984 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அரைப் பவுண் தோடு கொடுத்து உதவியவர்.

தமிழர் தரப்பு ஜெனீவா செல்வதற்கு முன்னரே தமிழின அழிப்பால்  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து சத்தியக் கடதாசிகளையும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும்  ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட இலங்கையில் உள்ள தூதரங்கள் மற்றும் சர்வ தேச ஊடகங்களுக்கும்  அனுப்பி வைத்தவர். இவரை தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையான மக்கள் தொண்டனாகக் கருதி நின்றனர்.

அத்தோடு நின்றுவிடாது புலம்பெயர் தேசங்களில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தும் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி வைத்தவர்

இவரது குடும்பம் ஒரு மூத்த போராளி குடும்பமாகும். இவரின் சமூகப் பற்றின் விளைவாக வீரமும் தியாகமும் நிறைந்த தமிழர் போராட்டப் பயணத்தில் இவருடைய குடும்பம் ஆற்றிய பங்கும் இவரது நீட்சியே.

எத்தகைய குணம் படைத்த மனிதர்கள் மத்தியிலும் எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி மிக அமைதியாகவும் எளிமையாகவும் தனது பணிகளை வெற்றிகரமாக ஆற்றிய வெள்ளை அண்ணர் என்றும் நினைவு கூறப்பட வேண்டிய மாமனிதர்.

பல்வேறுபட்ட போர்க்கால இடப் பெயர்வுகளின் போது பல்வேறு துயரங்களுக்குள்ளான மக்களின் வாழ்வு மேம்பட தன்னாலான மனித நேயப் பணிகளில் பங்காற்றியவர். அந்தோனிப்பிள்ளை ஐயா அவர்கள் தமிழின விடுதலைக்காக ஆற்றிய பணிகள் கனதியானது. 

தெரிந்தவர் தெரியாதவர் எனப் பாராது தேவையான உதவிகளை எல்லோருக்கும் வெள்ளை அண்ணர் செய்வார். உதவி கோருவோர் ஏழையாக இருந்தால் அதிக கவனம் செலுத்துவார். இவரை ஏழைகளின் நண்பன் எனக் கூறினால் மிகையாகாது.

1977 காலத்திலே தென்னிலங்கையிலே மிக நீண்ட வருடங்கள் வாழ்ந்த தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக தாக்கப்பட்டு கடல்மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் வடக்கு நோக்கி அனுப்பப்பட்டார்கள். புனித திரேசாஸ் கிளிநொச்சி ஆலயத்தில் இடம் பெயரப்பட்ட மக்களுக்கு கியூடெக் நிறுவனம் ஊடாக கத்தோலிக்க குருக்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். இதற்கான ஒழுங்குபடுத்தல்களையும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அரும்பாடுபட்ட மக்கள் எல்லோரையும் இணைத்து செயற்பட்டார்கள். அருட்திரு பயஸ் அடிகளார் அப்போது அவர் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். பயஸ் அடிகளாரிடம் தேவைகள் பற்றி கேட்டால் அந்தோனிப்பிள்ளை அவர்களுடன் கதைத்தே உரிய ஒழுங்குகளை செய்யும் படி பயஸ் அடிகளார் கூறுவது இவர் வேலைகளின் கனதியைக் காட்டியது.

அன்று ஆயிரக்கணக்கான அகதிகள் கிளிநொச்சியில் தஞ்சமடைந்தனர். பல முகாம்கள் தொடங்கி அகதிகளை தங்கவைப்பதில் அந்தோனிப்பிள்ளை அளப்பரிய சேவை ஆற்றினார். ஒவ்வொரு முகாம்களுக்கும் சென்று அவர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிய அந்தோனிப்பிள்ளையின் செயல் மிகவும் பாராட்டிற்குரியது. 

கியூடெக் நிறுவனத்தின் மூலம் சமூகத்தின் தேவைகளுக்காக பல உதவிகளை பெற்றுக் கொடுத்தவர். இன்று பல்வேறு திணைக்களங்களில் உயர்மட்டங்களிலும் ஏனைய மட்டங்களிலும் பணிசெய்கின்ற பலர் அந்தோனிப்பிள்ளை ஐயா அவர்களின் சிபார்சின் மூலம்  உயர்ந்து இருக்கின்றார்கள். 

பல்வேறு இடர்கள் மத்தியிலும் எல்லோரோடும் சேர்ந்து பணி செய்தவர் அந்தோனிப்பிள்ளை. அக்காலத்தில் மாவட்ட அரச அதிபர்களாக திரு.தில்லை நடராஜா, திரு.இராசநாயகம், திரு.ஐயாத்துரை, போன்றோர் கடும் யுத்த நாட்களில் அரச அதிபர்களாக பணிபுரிந்தார்கள். இவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக் கொண்டவராகவே அந்தோனிப்பிள்ளை விளங்கினார்.

திரு.இராசநாயகம் அவர்களின் காலத்தில் இவர் மூலமே முதியோர் இல்லம் நன்கு வலுப் பெற்றது. முடியாத காரியங்களை முடிப்பதில் வெள்ளை அண்ணர் பெரும் பங்கு வகித்தார். சுகாதார அதிகாரியாகப் பணியாற்றிய கந்தசாமி ஐயாவின் இழப்பிற்கு பின்பாக வன்னேரியில் இயங்கிய முதியோர் இல்லத்தின் பொறுப்புக்களை இவரே சுமந்தார். இடம் பெயர்க்கப்பட்ட போது முதியோர்களை திறம்பட இயலக் கூடியளவு பராமரித்து வந்தவர். மீள திரும்பிய போது அழிக்கப்பட்ட இவ் இடத்தினை மீள கடும் உழைப்பின் மூலம் உருவாக்கியவர். இதை அரச அதிபராக இருந்த திரு.இராசநாயகம் அவர்களின் ஆதரவோடு மீளவும் உருவாக்கிய முதியோர் இல்லம் இன்றும் உரிய இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது. 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் பொன். விநாயகமூர்த்தி ஐயாவுடன் கரம்கோர்த்து அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றியவர். 

கிளிநொச்சியில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பணியாற்றிய வேளையில் வைத்தியசாலையில் தானாகவே முன்வந்து பலரும் வியக்கும் வகையில் சுத்திகரிப்பு பணிகளைச் செய்து பெரும்பணி ஆற்றியவர்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிலின் வளர்ச்சியிலும், திரேசம்மா ஆலய முன்னேற்றத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு வாய் வார்த்தைகளுக்கு அப்பால் உண்மையான மதநல்லிணக்கம் பற்றி போதிக்கின்றது. 

ஜெயந்திநகர் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகளின் தலைமையில் மகாதேவ ஆச்சிரமப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்தோனிப்பிள்ளை மிகவும் ஆர்வத்துடன் ஆச்சிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இடம் பெயர்ந்து அக்கராயனில் இயங்கிய போது அக்காலத்திலே வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபையின் ஒரு உறுப்பினராக இருந்து பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் அனைவரோடு இணைந்து மக்களுக்குப் பணியாற்றியவர்.

மக்கள் மத்தியிலும், அரசமட்டங்களிலும், வைத்தியர்கள் சமூகத்திலும்,  பெரியோர்கள் மத்தியிலும், கத்தோலிக்க குருக்கள்  மத்தியிலும் பெரும் மதிப்புக் கொண்டவராகவே இறுதி வரை வாழ்ந்தார்.

சுயநலமற்ற புனித சேவை மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்துக் கொண்ட வெள்ளை அண்ணர் என அழைக்கப் பெறும் அந்தோனிப்பிள்ளை ஐயா அவர்களுக்கு "வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை" என மக்கள் புகழாரம் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்தோனிப்பிள்ளைக்கு  இடைஞ்சல்கள், வேதனைகள் செயற்பாடுகள் ரீதியாக இவருக்கு துன்பங்களைக் கொடுத்தாலும் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் உரிய விடயங்களை உரிய இடத்தில் செய்து முடிப்பவர். இவர் ஒரு நேர்மையாளன். தனது சொந்தப் பணத்தில் பல்வேறுபட்ட உதவிகள் கோரும் போதெல்லாம் செய்பவர்.  சட்டைப் பையை நிரப்பத் தெரியாத மனிதன் மற்றவர்களையும் நோகடிக்காத ஒரு மனிதர். 

அந்தோனிப்பிள்ளை அவர்கள் ஒரு வெள்ளை நிறம் கொண்டவர். இவரிடம் அரைக்கை வெள்ளை நிறச் சேட்டும் வெள்ளை நிற நான்கு முழ வேட்டியும் இவரோடு இருக்கும் என்பதை அவரை அறிந்த நண்பர்கள் அறிவார்கள் என்பது அவரின் எளிமையின் வடிவம். இவரைப் பற்றித் தெரிந்த விடயங்கள் நிறைய இருந்தாலும் ஒரு வீட்டிற்கு மூலைக் கற்கள் இருப்பது போல அந்தோனிப்பிள்ளை என்கின்ற வெள்ளை அண்ணர் தமிழர் தேசத்திற்கு ஒரு மூலைக் கல்லாக இருக்கின்றார் என்பதை நிமிர்ந்து சொல்லி இவர் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அந்தோனிப்பிள்ளை ஐயா அவர்கள் காட்சிய பாதையைப் பின்பற்றி வணங்கி நிற்போம்.

குறிப்பு:-

ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் நாளை மறுதினம் புதன்கிழமை (25.03.2023) அன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் அமைந்துள்ள வீட்டில் நடைபெறும். பின்னர் அவரது பூதவுடன் வன்னோிக்குளம் யோகர் சுவாமிகள் முதியோர் இல்லத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம். இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://youtube.com/live/sLAYVJ54kPw?feature=share
(26.03.2024 இலங்கை நேரம்  மாலை 3 மணி முதல் ) 

https://youtube.com/live/TafHX8ByreM?feature=share 

(27.03.2024 இறுதி நிகழ்வு இலங்கை நேரம் காலை 8 மணி முதல்)



No comments