படுகொலை செய்யப்பட்ட வட்டு இளைஞனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு


யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் , ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து , கணவன் - மனைவி இருவரையும் இரு வாகனங்களில் வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று , கணவனை தாக்கி படுகாயமேற்படுத்தி வைத்தியசாலை முன்பாக வீசி சென்ற நிலையில் , மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த யாழ்ப்பாணம் - அராலி பகுதியை சேர்ந்த நால்வரை கைது செய்திருந்தனர். 

இந்நிலையில் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் அநாதரவாக கார் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் காரினை மீட்டுள்ளனர். 

காரினுள் இரத்த கறைகள் , கொட்டன்கள் , காணப்பட்டுள்ளன. காரினுள் வைத்தே இளைஞனை சித்திரவதை செய்து படுகாயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அதேவேளை கார் தூசிகள் படிந்த நிலையில் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது . 

No comments