ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சிகள் அணிகளாக உருமாறுவதும் கட்சிகளை ரணில் பிளவுபடுத்துவதும்! பனங்காட்டான்


ஜனாதிபதி தேர்தல் அக்டோபரில் நடைபெறவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்த போதிலும் தேர்தல் நடைபெற்று முடியும்வரை அதனை நம்பும் நிலையில் பலரும் இல்லை. ஆனாலும் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் தங்கள் மீதான நம்பிக்கையின்மையால் அணிகளை உருவாக்கி வருகின்றன. ரணில் தமது பாணியில் மற்றைய கட்சிகளை பிளவுபடுத்தி லாபம் பெறும் முயற்சியில் அமைதியாக செயற்பட்டு வருகிறார். 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலைப் பற்றி தமிழர் தாயகமெனும் வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவுக்கு எந்த அக்கறையுமில்லை. தமிழரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்தான் அங்கு இப்போது முக்கியமான சமாசாரம்.

மாறாக, தென்னிலங்கையில் தினசரி ஏதோ ஒரு செய்தி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளிவந்தவாறுள்ளது. இத்தேர்தல் எப்போது இடம்பெறுமென்று எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக இதுவரை வரவில்லை. 

அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடைபெறுமென்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளதால் நிச்சயமாக தேர்தல் நடைபெறுமென்ற நம்பிக்கை சிலரிடம் துளிர்த்துள்ளது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அக்டோபர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டுமென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பலருக்கும் இதில் நம்பிக்கையில்லை. 

இருப்பினும், நம்பிக்கையூட்டும் வகையில் இத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். எந்தக் கட்சியில் அல்லது எந்த அணியில் போட்டியிடப் போகிறார் என்று மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. 

கடந்த வருடம் நாடு முழுவதுமுள்ள 340 உள்ளூராட்சிச் சபைகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடானது. 8,325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல அரசாங்க ஊழியர்கள் சம்பளமற்ற விடுப்பு எடுத்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். 58 அரசியல் கட்சிகளும் 329 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட களமிறங்கின. 

வாக்காளர் அட்டைகள் பல்லாயிரம் ரூபா செலவில் அச்சிடப்பட்டது. அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெற வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டது. இன்றுவரை தேர்தல் நடைபெறவில்லை. இதுபற்றி இப்போது யாரும் பேசுவதுமில்லை. எல்லோரும் மறந்துவிட்டனர். நடைபெறாதுபோன உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் ரணில் விக்கிரமசிங்க. அவரது திட்டப்படி தேர்தல் நடைபெறாமலே போய்விட்டது. 

1987ம் ஆண்டில் ராஜிவ் காந்திக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்குமிடையில் கைச்சாத்தான இலங்கை-இந்திய ஒப்பந்தம் இன்னும் நான்கு மாதங்களில் முப்பத்தியேழு வயதைத் தாண்டப் போகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபைக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. வடமாகாண சபைக்கு ஒரு தடவை மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. 

இப்போது மாகாண சபைகள் ஆட்சிபீடத்தின் ஏஜன்டுகளாக நியமனமான ஆளுனர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள் செயற்படுத்தும் திட்டங்களை தட்டிக் கேட்க மாகாண சபைகள் இல்லை. 13ம் திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரமும் காவற்துறை அதிகாரமும் வழங்கப்பட்டது. இன்றுவரை இந்த அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளன. 

சட்டப்படி இந்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக்கூடாது என்பதில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் சகல சிங்களக் கட்சிகளும் ஒற்றை நிலைப்பாட்டிலுள்ளன. வழங்கப்படாத காவற்துறை அதிகாரத்தை 13ம் சட்டத்திருத்தத்தில்கூட இருக்க விடக்கூடாது என்ற முனைப்பு இப்போது எழுந்துள்ளது. இதற்கென அரசியல் அமைப்பில் 22ம் திருத்தத்தை கொண்டுவர தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சிங்கள இனவாதத்தைக் கக்கி வரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான சுயாதீன எதிரணி எம்.பி. உதய கம்மன்பில கடந்த வாரம் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். மற்றொரு சிங்கள இனவெறி அரசியல் கட்சியான விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. மொகமட் முசம்மில் இதனை வழிமொழிந்தார். 

சட்ட மாஅதிபரின் அவதானிப்பை இச்சட்டமூலம் பெற்ற பின்னர் 52(4)ம் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரமாகும். இது நாடாளுமன்றத்துக்கு வரும் பட்சத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் வெல்லுமா தோற்குமா என்பதற்கும் அப்பால், சிங்கள பேரினவாதம் சாதாரண காவற்துறை அதிகாரங்கூட மாகாணங்களுக்கு இருக்கக்கூடாது என்பதில் எவ்வளவு தூரம் துவேசத்துடன் செயற்படுகின்றது என்பதை இதனூடாக நோக்க முடிகிறது. 

அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படைக் குறிக்கோளால் 13ம் திருத்தத்தில் இணைக்கப்பட்டது மாகாண நிர்வாகம். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவான 13ம் திருத்தத்தை வெற்றுக்கடதாசியாக்குவதற்கு சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து போராடி வருகிறது. 

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தமது காலஞ்சென்ற தந்தை ரணசிங்க பிரேமதாச போன்று ராணுவ ரீதியாக தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்புவது போலத் தெரிகிறது. போர்க்குற்றவாளிகளாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களாகவும் அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளையும், தளபதிகளையும் தமது கட்சியில் இணைப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார். 

போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் ராணுவ தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா ஏற்கனவே சஜித் பிரேமதாச அணியிலுள்ளார். மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பம் அவரிடம் இன்னமும் இருக்கிறது. இவர் ஒருவர் போதாது என்று தமிழர் தாயகத்தில் போரில் முன்னணியில் நின்ற படைத்துறை அதிகாரிகளை ஒவ்வொருவராக சஜித் தம்முடன் இணைத்து வருகிறார். 

முன்னாள் கடற்படைத் தளபதியான சரத் வீரசேகர போன்ற படைத்துறை அதிகாரிகளை உள்வாங்கி வியத்கம என்ற ஷகுசினி ஆலோசனை| அமைப்பை உருவாக்கி ஜனாதிபதியான கோதபாய ராஜபக்ச, அவர்களின் வழிநடத்தலில் செயற்படப் போய் இறுதியில் என்னவானார் என்பதை சஜித் பிரேமதாச எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார். 

கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றில் பணியாற்றும் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் சில நாட்களுக்கு முன்னர் இதுபற்றித் தெரிவிக்கையில், 'சஜித் பிரேமதாசவை நெருக்கடியில் தள்ளி பழிவாங்குவதற்காக முன்னாள் படைத்துறை அதிகாரிகளை ரணில் விக்கிரமசிங்கவே அவரிடம் அனுப்பி விடுகிறார்" என்று கூறியதில் உண்மை இருக்கலாம். 

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசநாயக்க அடுத்த ஜனாதிபதி தாமே என்ற நம்பிக்கையில் வீச்சாக நடைபயில்கிறார். அழைக்கும் நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். அமெரிக்கா சென்றபோது அமோக வரவேற்பு. இந்தியாவும் சும்மா விடவில்லை. அங்கு ஏகப்பட்ட சந்திப்புகள். ஜனாதிபதித் தேர்தல் தேவைக்கு பெருந்தொகை நிதியை இந்தியாவிடமிருந்து அவர் பெற்றதாக பௌத்த விகாராதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். 

1971 ஏப்ரலில் அன்றைய பிரதமர் சிறிமாவோவின் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. மேற்கொண்ட புரட்சியை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய ஆட்சிபீடமே தவிடுபொடியாக்கியது. இரண்டு வாரங்களில் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று குவிக்க இந்தியா ஒரு டசின் ராணுவ உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு வழங்கியது ரகசியமன்று. 

1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக ஜே.வி.பி. பாரிய வன்செயல்களில் ஈடுபட்டது. இந்திய பொருட்களுக்கு தடை விதித்தது. இந்திய சினிமாப் படங்களுக்கு தடை விதித்தது. இதனை மீறியவர்களை படுகொலை செய்தது. இன்று ஜே.வி.பி. இந்தியாவின் ஷதோழன்புள்ள| பிரியன். அரசியலில் நண்பன் பகைவனாவதும், பகைவன் நண்பனாவதும் - மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. 

அனுர குமார திசநாயக்கவின் இந்திய விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது ரணில் வழங்கிய பதில் சுவையானது. 'வழக்கமாக தேர்தல் நடைபெறவுள்ள வேளைகளில் எதிர்க்கட்சியினரையே இந்தியா அழைத்து உரையாடுவது வழக்கம். தற்போது இலங்கையில் எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச அணி இல்லையென்பதை இந்தியா புரிந்துள்ளது" என்ற பதிலினூடாக சஜித் பிரேமதாசவை அரசியலின் ஓரத்துக்கு நாசூக்காக தள்ளியுள்ளார். 

இலங்கையில் நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் அல்லாது கூட்டு அணிகளின் வேட்பாளர்கள் என்பதிலேயே பலரும் அக்கறை கொண்டுள்ளனர். இதற்காக சிறிய கட்சிகள் சுயாதீன குழுக்கள், சுயேட்சைகள் தங்களுடன் இணைத்துக் கொள்வதில் பல கட்சிகளும் தீவிரம் கொண்டுள்ளன. 

ரணில் விக்கிரமசிங்க மட்டும் முற்றிலும் மாறாக மற்றைய கட்சிகளையும் அணிகளையும் பிளந்து பிரித்து அதிலுள்ளவர்களை தமது அணிக்குள் இழுக்கும் தமது வழக்கமான பாணியில், அமைதியாக செயற்பட்டு வருகிறார். 

அதேசமயம், தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவுப் போட்டியில் சுமந்திரன் தோல்வியடைந்ததையிட்டு ரணில் மகிழ்ச்சி கொண்டுள்ளதாகவும் கொழும்பு ஊடக நண்பரொருவர் தெரிவித்தார். ''எங்கள் சட்ட மாஅதிபர்" என்று சுமந்திரனை சில மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அழைத்தமை ''வஞ்சகப் புகழ்ச்சி'' என்று ரணிலின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. 


No comments