முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள் 130 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு


முல்லைத்தீவு, கரியல் வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 பிரதேசவாசிகளுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

1908ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதி மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில், அந்த மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசியா பூங்காவுக்குள் உட்சென்றமை, தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை, காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கானது இன்றைய தினம் (07) முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், சட்டத்தரணி சி.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில், 

இன்று முல்லைத்தீவு மாவட்டத்திலே சுண்டிக்குளம் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் கிட்டதட்ட 130 நபர்களுக்கு எதிராக வழக்குகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளார்கள். 

அதில், அப்பிரதேசவாசிகள் அத்துமீறி குடியிருந்ததாகவும், தாவரங்களை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுண்டிக்குள பிரதேசத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராகவும், இறந்த மக்களுக்கு எதிராகவும், ஒரு நபருக்கு எதிராக மூன்று, நான்கு வழக்குகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சரியான வரைபடங்களோ, எந்த காலப்பகுதியில் அப்பகுதி சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்த வித தகவல்களோ இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடாத்தி, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் நில அளவை திணைக்களத்தினர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள்.

இன்றைய தினம் நிதிமன்றில் இவ்வழக்கானது அடிப்படை ஏதுகள் அற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதும், மக்களின் நில உரிமையினை பறிக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.

மேலும், வழக்கு தொடுநர் தரப்பு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நீதவானால் பணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு அடுத்த வருடம் வைகாசி மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments