காணியும் மிச்சமில்லையாம்!

 


இலங்கை அரசு ஒருபுறம் தமிழ் மக்களிற்கு தீர்வு வழங்கப்போவதாக பிரச்சாரங்கள் செய்துவருகின்ற நிலையில் மறுபுறம் காணி பிடிப்பை வடகிழக்கில் முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு, கரியல் வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 பிரதேசவாசிகளுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

1908ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதி மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில், அந்த மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசியா பூங்காவுக்குள் உட்சென்றமை, தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை, காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சுண்டிக்குள பிரதேசத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராகவும், இறந்த மக்களுக்கு எதிராகவும், ஒரு நபருக்கு எதிராக மூன்று, நான்கு வழக்குகள் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார். 

சரியான வரைபடங்களோ, எந்த காலப்பகுதியில் அப்பகுதி சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்த வித தகவல்களோ இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடாத்தி, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் நில அளவை திணைக்களத்தினர் வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன..

இந்நிலையில், வழக்கு அடுத்த வருடம் வைகாசி மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments