ரணிலின் 2024 பட்ஜெட் யோசனை ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம்! பனங்காட்டான்


நிறைவேற்ற முடியாத வரவு செலவுத் திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்ட சமவேளையில், கோதபாய-மகிந்த-பசில் சகோதரர்கள் மீது பொருளாதார குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடித் தீர்ப்பு, ரணிலின் கையில் வந்து வீழ்ந்துள்ள நாகாஸ்திரம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.பிக்களை பவுத்திரமாக காத்துக் கொண்டிருக்க வேண்டிய காலமிது. 

தமிழ் சினிமா பாணியில் சொல்வதானால், அனைவராலும் - ஆளும்  தரப்பு, எதிர் தரப்புகள், சமூக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் என்று எல்லாத் தரப்பாலும் எதிர்பார்க்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஒருவாறு ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துவிட்டார். 

இதன் மீதான ஒரு மாத விவாதங்களைத் தொடர்ந்து அடுத்த மாதம் 13ம் திகதி இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும். எதிர்க் கட்சிகள் எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ரணில் விக்கிரமசிங்க மிகவும் திடமாக உள்ளார். 

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன இதனை ஆதரித்து நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அரகலவினால் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட கோதபாய, அமைச்சுப் பதவிகளைத் துறந்து ஓடிய அவரது சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள் என்போர் தொடர்ந்து அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமெனில் ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்ற வேண்டிய தேவை இவர்களுக்கு அவசியம். 

வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் (இவை யோசனைகள் மட்டும்தான்) ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாதவை என்பது 225 எம்.பி.க்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தெரியும். 

நாளாந்த வாழ்வுக்கான நிதிக்கே உலகிடம் கை நீட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அள்ளி அள்ளி செலவு செய்யக்கூடிய போதிய நிதிவளம் நாட்டில் இல்லை. வசதி குறைந்தவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கியிருக்க வேண்டிய சமுர்த்தி உதவியே இன்னமும் முழுமையாக கொடுபடாத நிலையில், கோடானகோடி ரூபாவை வரவு செலவுத் திட்ட யோசனைகளை நிறைவேற்ற எங்கிருந்து பெறுவது?

அறுபதுக்கும் அதிகமான யோசனை அறிவிப்புகளைக் கொண்ட அறிக்கையை வாசிக்கும்போது, ரணில் விக்கிரமசிங்க தமக்கு விருப்பமான ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்து உரையாடியவாறு செயற்பட்டார் என்ற செய்தியைப் படித்தபோது, இதுதான் ரணிலின் பாணி என்பதை அறிந்தவர்கள் தெரிந்திருப்பர். 

இவரால் முன்வைக்கப்பட்ட ஐந்து டசின் வரையான யோசனைகளில் சுமார் ஒரு டசின் வரையானவை தமிழர் சம்பந்தமான வடக்கு கிழக்கு சம்பந்தப்பட்ட தண்ணீர்ப் பிரச்சனை, மீள்குடியேற்றம், கடற்றொழில் அபிவிருத்தி, காணாமலாக்கப்பட்டோர் இழப்பீடு, நகர நிர்மாணம், முதலீட்டு மையங்கள், குடிநீர்ப் பிரச்சனை, திருமலை துறைமுக அபிவிருத்தி என்று பலவற்றை உள்ளடக்கியிருப்பதை சற்றுக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். 

இதற்கு முன்னைய எந்தவொரு வரவு செலவுத் திட்டத்திலும் இல்லாதவாறு இவ்வளவு தூரத்துக்கு தமிழர் பிரதேச தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரணிலின் கடந்த ஒரு வருடத்தைத் தாண்டிய ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் தமிழர் அரசியல் பிரதிநிதிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளையும் அளித்த வாக்குறுதிகளையும் மீள்நோக்கிப் பார்க்கின் எதனையுமே அவர் நிறைவேற்றவில்லை என்பது தெரியவரும். இதுதான் வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கும் நடைபெறப்போகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் கெட்டித்தனமாக கச்சிதமாக தமிழர் தரப்பு அரசியல் அரங்கை சிதறடித்து வெற்றி கண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளக்கப்பட்டது. தமிழரசின் சுமந்திரனை அரசியலில் சில்லறையாக்கி செல்லாக்காசாக்கினார். வன்னியில் ரகசியமாக கரும்புத் தோட்டம் அமைக்க வேண்டுகோள் விடுத்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனை காட்டிக் கொடுத்தார். சம்பந்தனின் பதவி பறிப்பு முயற்சியின் பின்னாலும் இவருக்குப் பங்குண்டோ தெரியாது. 

இறுதியாக, தம்மை அரவணைத்த இரண்டு விக்னேஸ்வரன்களையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தார். இவர்கள் முன்வைத்த மாகாண சபை ஆலோசனைச் சபைகளை அமைக்கும் யோசனையை ஏற்றதாகக் கூறியவர் பின்னர் அதனை மறந்தேவிட்டார். அதனால் இப்போது ரணிலை மோசமாக விமர்சிப்பவராக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாறியுள்ளார். 

இந்தப் பின்னணியில் பார்க்கையில் வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஏட்டுச் சுரைக்காய்கள்தான். 1965 முதல் ஐந்து வருடங்கள்  பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்க தமது ஐந்து வரவு செலவுத் திட்டத்திலும் தமிழருக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைக்க நிதி ஒதுக்கி வந்தார். தமிழரசு - தமிழ்க் காங்கிரஸ் ஒற்றுமையின்மையை காரணமாக வைத்து அந்தப் பல்கலைக்கழக உருவாக்கத்தை காணாமலாக்கினார். இந்தப் பாதையையே ரணில் பின்பற்றுவார் போலத் தெரிகிறது. 

இவர் இந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினருக்கு அரிய சந்தர்ப்பம் என்று அழைப்பு விடுத்துள்ளார் மகிந்தவின் புதல்வரான நாமல் ராஜபக்ச. ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் நாமலின் விருப்புக்கு உடன்பட மாட்டார்கள் என்பது சஜித்துக்கு நன்கு தெரியும். வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால், அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படும் (இதனை இரண்டு வாரங்களுக்கு முன்னைய பத்தியிலும் குறிப்பிட்டிருந்தேன்). 

இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை இரு தரப்பிலும் தற்போது எம்.பிக்களாக இருக்கும் பலர் விரும்ப மாட்டார்கள். முழுமையாக ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்யாதவர்கள் பென்சன் பெறும் தகுதியை இழப்பர். மீண்டும் தேர்தல் நடைபெறும்போது வெற்றி பெறத் தவறின் எம்.பி. பதவியையும் இழக்க நேரிடும். 

மறுபுறத்தில், புதிய நாடாளுமன்ற தேர்தலை ரணில் எப்போது நடத்துவார் என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இதற்கு உதாரணமாக உள்;ராட்சித் தேர்தலை காலவரையின்றி அவர் பின்போட்டதை நினைவில் கொள்ளலாம். இதனால் பெரமுன தரப்பினர் மட்டுமன்றி சஜித்தின் எதிர்க்கட்சித் தரப்பினரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதை உள்;ர விரும்பப் போவதில்லை. 

மரத்தால் விழுந்தவரை மாடு ஏறி மிதிப்பது போன்று கோதபாய, மகிந்த, பசில் சகோதரர்கள் மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைந்துள்ளது. நாட்டின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு இவர்களும், இவர்களோடு இணைந்து செயற்பட்ட அதிகாரிகளும் காரணமென்று பெயர் சூட்டி அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. 

இந்தத் தீர்ப்பை ஏற்கப் போவதில்லையென்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்றபோது மகிந்த கூறினாராயினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாற்ற முடியாதது என்பது அவருக்குத் தெரியாததல்ல. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி மூன்று ராஜபக்ச சகோதரர்களதும் சிவில் உரிமையை பறிக்க வேண்டுமென குரல் கொடுத்துள்ளார் சஜித் பிரேமதாச. இதனை பொதுவெளியில் காட்டிக் கொள்ள விரும்பாவிடினும் ரணிலின் விருப்பமும்கூட இதுவாக இருப்பதற்கு சாத்தியமுண்டு. 

1980ல் ரணிலின் பெரிய தந்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவும், சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாச பிரதமராகவும் இருந்தபோதுதான் சிறிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, நிஹால் ஜெயவிக்கிரம ஆகியோரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு அவர்கள் அரசியலில் ஈடுபடும் உரிமை மறுக்கப்பட்டது. 

இப்போது பிரேமதாசவின் மகனின் வேண்டுகோளை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன் ஏற்று ராஜபக்ச சகோதரர்களின் குடியுரிமையை ஏழாண்டுகளுக்குப் பறிக்க முன்வருவார்களாயின் என்ன நடைபெறும்?

பெரமுனவின் பெருந்தொகையான எம்.பிக்கள் ஷகப்பல் கவிழ எலிகள் பாய்வது| போன்று ரணில் பக்கத்துக்கு தாவக்கூடிய சாத்தியமுண்டு. பெரமுன எம்.பியான நிமல் லான்ச சுமார் அறுபது எம்.பிக்களுடன் இதற்குத் தயாராக உள்ளதாகவும், இவர்களின் ரகசியக் கூட்டமொன்று இந்த வாரம் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது. 

சஜித் அணியிலிருந்தும் கணிசமானோர் ரணில் பக்கம் சேரக்கூடுமென்ற வதந்தி பல மாதங்களாக உலாவி வருகிறது. சஜித் அணியைச் சேர்ந்த ஹரின் பெர்னான்டோ, மனு~ நாணயக்கார ஆகியோர் ரணிலுடன் சேர்ந்து அமைச்சர் பதவியை பெற்றனர். மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரும் அமைச்சர்களாயினர். ஜனாதிபதி தெரிவின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தமக்கு வாக்களித்ததாக ரணில் கூறியதும் ஞாபகமிருக்கலாம்.

இதனூடாக அறிய முடிவது என்ன? இப்போதுள்ள எம்.பிக்கள் பலரும் கொள்கைவாதிகள் அல்ல. பதவிவாதிகள், சந்தர்ப்பவாதிகள். தொடர்ந்து அரசியல் பதவி வகிப்பதற்காக கட்சி மாறத் தயாரானவர்கள். 1952ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவிலிருந்து இன்றுவரை அதுவே தொடர்கிறது. 

நிகழ்கால அரசியல் சூழ்நிலையில் ரணிலின் வரவு செலவுத் திட்ட ஷயோசனை| நாடாளுமன்றத்தி;ல் நிறைவேற்றப்பட்டாலென்ன, தோல்வி அடைந்தாலென்ன அவரின் ஜனாதிபதிப் பதவியை அது பாதிக்கப்போவதில்லை. அவரே தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பார். அவர் விரும்பும் சிறிய தொகை அமைச்சர்களுடன் அடுத்த பொதுத்தேர்தல்வரை காபந்து அரசாங்கம் ஆட்சியை நடத்தும். 

ஒன்றுமட்டும் புரிந்து கொள்ள வேண்டும் - ரணிலின் நிறைவேற்ற முடியாத வரவு செலவுத் திட்ட யோசனை அவரது அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம். 

No comments