மட்டக்களப்பு-மானிப்பாய் பகுதிகளில் கெடுபிடி!

 


எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தலை தடுக்கும் முகமாக, மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை

காவல்துறையால் தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே விண்ணப்பத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் (20)ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நடத்த தடைவிதிக்கக் கோரியே மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் காவல்துறை மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மானிப்பாய் காவல்துறையினரின் தடைக் கோரிக்கையை தமிழ் தரப்புக்கள் நிராகரிக்குமாறு கோரியுள்ளன.

விசாரணைகளை அடுத்து விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments