காவல்துறைக்கு பணிய மாட்டோம்:முன்னணியாழ் தையிட்டியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் கட்டளையொன்றை பிறப்பித்துள்ள நிலையில், காவல்துறையினரின் சட்டவிரோத உத்தரவுகளை மதிக்க தாம் தயாரில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராகவே பலாலி காவல்துறையினரின் கட்டளையை பெற்றுள்ள நிலையில், முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் இதனைக் கூறியுள்ளார்.

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரையில் கஜினமகா நடைபெறவுள்ளதாகவும் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தினால் குழப்பம் ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது, தமிழ் சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டக் கூடிய வாய்ப்புள்ளதால், குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்குமாறு காவல்துறையினரால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கட்டளையொன்றை வழங்கியுள்ளது.

இந்த கட்டளையை மதித்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள சுகாஸ், எனினும் கட்டளைக்கு புறம்பாக காவல்துறையினர் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


மேலும், காவல்துறையினரின் சட்டவிரோத உத்தரவுகளை மதிக்க தாம் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments