ரணிலை எதிர்க்க வக்கில்லை:டெலோ பிரபலம்!



ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழீழ விடுதலை இயக்க தலைமை நெருங்கிய உறவை தொடர்ந்து பேணியே வருகின்றது.

இந்நிலையில்  ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது. 

ரணிலின் எதேச்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை  தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடயம் எனவும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள்  மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் எனவும் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.


No comments