தேர்தலிற்கு செல்லலாம்:மொட்டு முடிவு



பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்காவிட்டால் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டிய நிலைமை உருவாகலாம். ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால்,கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களாலும் நிராகரிக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கருதுவதாக அறியமுடிகின்றது.

கட்சி காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சி மாநாடு மற்றும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ராஜபக்ஷமாருக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது.


கடந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கு சமர்ப்பித்துள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் குறித்தும் சிரேஷ்ட உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனவே, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இளம் எம்.பி.க்கள் குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.


எவ்வாறாயினும், வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கட்சித் தலைமையிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இங்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்காவிட்டால் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டிய நிலைமை உருவாகலாம்.எனவே ஆதரவளிக்காமல் விட்டு தேர்தல் ஒன்றுக்கு தயாராவது நல்லதென கட்சியின் உறுப்பினர்கள் பலர் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments