நகுலேஸ் கைது மனித உரிமை மீறல்!

 


மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைதானமை தொடர்பில் அவரின் மனைவி மட்டக்களப்பில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 25ம் திகதி ஜனநாயகப் பேராளிகள் கட்சியினால் வெல்லாவெளியில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்pலையில் நிகழ்வு தொடர்பில் வெல்லாவெளி காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

என்.நகுலேஸ் கைதானது மனித உரிமை மீறலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது எனவும் தெரிவித்தே அவரின் மனைவி முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

அரசாங்ககத்தினால் எதுவித தடைகளும் விதிக்கப்படாத நிகழ்வுக்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்று நிகழ்வு நடைபெறும் தினத்தன்றே, நிகழ்வு நடைபெறும் இடத்தில் வைத்தே அவரிடம் தடையுத்தரவினை வழங்கினார்கள்.

காவல்துறையினரின் நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்றதும் நீதிமன்றத்தின் கட்டளைக்கு மதிப்பளித்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. காவல்துறையினர் நகுலேசைக் கைது செய்திருப்பதானது அவர்களே நீதிமன்றக் கட்டளையை மீறி நடக்கும் செயற்பாடு எனவும் என். நகுலேசின் மனைவி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் நிகழ்வு தொடர்பில் அன்றைய தினம் பிற்பகல் நீதிமன்றில் முன்னிலையாகி தங்கள் தரப்பு விளக்கத்தினை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனையும் பொருட்படுத்தாது காவல்துறையினர் திடீரென எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி அவரை வாக்குமூலம் வழங்க வேண்டும் என்ற பெயரில் அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர்.அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்; அவரை விளக்கமறியலில் வைத்திருப்பதானது மனித உரிமை மீறும் செயற்பாடு எனவும் நகுலேசின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.


No comments