யாழ். செம்மணி வீதியில் கழிவு நீரை ஊற்றியவர்களை மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்


யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் வவுசர் வண்டியே இவ்வாறு பிடிபட்டது.

வழமையாக இவ்வாறு கழிவுகளை ஊற்றி விட்டு செல்லும் வவுசர் வண்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் இன்று காலை மறைந்திருந்து வவுசரில் வந்தவர்கள் கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்து சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments