வடக்கு மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்


வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

நாங்கள் நிலையான அபிவிருத்தி அடைய வேண்டுமென்றால் இந்த கண் சுகாதாரம், கண்பார்வை சிறப்பாக இருக்க வேண்டும்.

 இது ஐக்கிய நாடுகள் சபையிலேயே 2021 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது,

அந்த வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வருடம் முதல் எதிர்வரும் மூன்று வருடங்கள் இலவசமாக 10 ஆயிரத்துக்கு மேல் கண் தொடர்பிலான சத்திர சிகிச்சைகளை செய்வதற்கு யோசனை செய்து இருக்கின்றோம். 

இந்த நடைமுறையின் மூலம் வடமாகணத்தில் இருக்கும் சகல மாவட்டங்களும், அந்தந்த கிராமிய வைத்தியசாலைகள் ஊடாக இதற்கான நபர்களை தெரிவு செய்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது, 

இதனால்  கட்டம் கட்டமாக ஒரு வருடத்துக்குள் இதற்காக காத்திருக்கும் அனைவருக்கும் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியதாக இருக்கும். 

அதேவேளை கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு (கண்ணாடி அணிதல் ) உதவும் நோக்குடன் ஆனந்தா பவுண்டேஷன் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். 

தை மாதம் இதற்கான நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். அதன் முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும்.

அதேவேளை மந்த பார்வை அல்லது பார்வை இல்லாதவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


No comments