கடலினை விற்பதை விட மீனவர்களை விற்றுவிடலாம்!



இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளநிலையில் உள்ளுர் மீனவர்கள் அதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அரசின் முயற்சி வடக்கு கடற்பகுதியை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம், இலங்கை அரசு வடக்கு கடற்தொழிலாளர்களையும், தென்பகுதி கடற்தொழிலாளர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்கள் நீர்கொழும்பு அல்லது சிலாபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தக் கருத்தை பிரதமர் வெளியிடுவாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

வடக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கும் அந்த வருமானத்தையே நம்பியுள்ளனர், எனவே, பிரதமரின் கருத்தால் வடக்கு கடற்தொழிலாளர்களை விற்பனை செய்ய அரசாங்கம் பார்க்கிறதா என்றே சந்தேகம் எழுகிறதென என் என். எம். ஆலம் தெரிவித்துள்ளார்.

வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது, அதிலும் வட பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் இன்னும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.எது எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் என்.எம்.ஆலம்  வலியுறுத்தியுள்ளார்.


No comments