சட்டம் சவக்கிடங்கில்! நீதியின் விலை என்ன? பனங்காட்டான்


சட்டமா அதிபரின் அழைப்பின் பேரில் நீதிபதி சரவணராஜா அவரைச் சந்தித்தாரா? அல்லது தாமாகவே சென்று சட்டமா அதிபரை நீதிபதி சந்தித்தாரா என்பதல்ல இன்றுள்ள கேள்வி. இந்தச் சந்திப்பின்போது முன்னைய நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்குமாறு நீதிபதியிடம் சட்டமா அதிபர் கோரினாரா இல்லையா என்பதற்கான உண்மையான பதிலே இன்று உண்மையாக வேண்டப்படுகிறது. 

தமிழர்களின் இனப்பிரச்சனைத் தீர்வு என்பது மாகாண சபை நிர்வாகம், அதற்கான தேர்தல், 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துதல், இந்திய பிரதமரைச் சந்திக்க பயணம் மேற்கொள்ளுதல் என்றவாறு இழுபட்டு இறுதியாக குருந்தூர் மலை ஆலய விவகாரத்தில் நின்றது. 

இப்போது இதன் அடுத்த கட்டமாக முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்களை முன்னிறுத்தி செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது. அநேகமாக தமிழ்த் தேசிய பரப்பின் சகல அரசியலாளர்களும் அவர்களின் கட்சிப் பிரமுகர்களும் இது விடயமாக தங்களின் கண்டனங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு இது தொடரும் வாய்ப்புண்டு. 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இந்த மாதம் (அக்டோபர்) 13ம் திகதிவரை இடம்பெறவுள்ளதால் அதன் பக்க அமர்வுகளிலும் இவ்விவகாரம் முன்வைக்கப்படலாம். 

நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல், அவமதிப்பு, அழுத்தங்கள் காரணமாக  தமது பதவியைத் துறந்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்த நிலைமைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்த கூட்டாக முடிவெடுத்துள்ளனர். இதன் பின்னர் முல்லைத்தீவை முடக்கும் போராட்டத்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இப்போராட்டங்கள் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் தொடரக்கூடிய சூழ்நிலை உண்டு. சனல்-4 வெளிப்படுத்திய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பிரச்சனை தென்னிலங்கையில் சில காலத்துக்கு மறந்துபோக முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் உதவலாம். 

குருந்தூர்மலை ஆலயப் பகுதியை தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றியதும், இங்கு புதிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்ததும், குருந்தூர்மலை பொங்கல் வழிபாட்டை காவற்துறையினரின் பலத்துடன் பௌத்த பிக்குகள் குழப்பியடித்ததும் என தொடர்ச்சியான பல சம்பவங்களின் பின்னணியில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர். 

நீதிமன்றமாவது நீதி வழங்கலாம் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை. மறுஅறிவித்தல்வரை விகாரை அமைக்க நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடையை மீறி பொலிஸ் - ராணுவ பாதுகாப்புடன் விகாரை நிர்மாணம் இடம்பெற்றது. 

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா கடந்த யூலை நடுப்பகுதியில் அந்த இடத்தை நேரடியாகப் பார்வையிட அங்கு சென்றிருந்தார். இதிலிருந்துதான் மறுதரப்பு பிரச்சனைகளை ஆரம்பித்தது. சிங்கள இனவாதியாக தம்மை அடையாளப்படுத்தி வரும் கடற்படை முன்னாள் அதிகாரியான சரத் வீரசேகர எம்.பி. (கோதபாய நிர்வாகத்தில் அமைச்சராக இருந்தவர்) நீதிபதிக்கு தமது பக்கக் கருத்துகளை எடுத்துரைக்க முயன்றார். 

அதற்கு நீதிபதி இடமளிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா என்பதை பார்வையிடவே அந்த இடத்துக்கு தாம் வந்ததாக தெரிவித்த நீதிபதி, விசாரணை நடத்துவதற்காக அல்லவென்று பவ்வியமாக எடுத்துக் கூறிய போதிலும், தம்மை சிங்கள மக்களின் பிரதிநிதி என்ற தோரணையில் சரத் வீரசேகர தொடர்ந்தும் கருத்துக் கூற முனைந்தபோது, 'உங்களுக்கு இடமளித்தால் மற்றையோருக்கும் இடமளிக்க வேண்டிவரும். விசாரணைகள் நீதிமன்றத்தில் மட்டுமே இடம்பெற வேண்டும்" என்று தமது முடிவைத் தெரிவித்த நீதிபதி சரவணராஜா அங்கிருந்து போய்விட்டார். 

இதன் பின்னரே விவகாரம் இனவாதமாக மாற்றப்பட்டது. நீதிபதியின் விசாரணைத் தீர்ப்பைக் கண்டித்த சரத் வீரசேகர மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி நீதிபதிக்கு எச்சரிக்கைப் பாணியில் அச்சத்தை ஏற்படுத்தினார். மற்றொரு எம்.பி.யான உதய கம்மன்பில தமது பங்குக்கு இனவாதத்தைக் கக்கினார். 

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர நீதிபதிக்கு அச்சமூட்டும் வகையில் உரையாற்றியதை சபாநாயகர், பிரதமர், நீதியமைச்சர் எவருமே தடுக்கவில்லை. அவரின் உரைகளை நாடாளுமன்ற பதிவேடான ஹன்சாட்டில் நீக்குமாறும் உத்தரவிடவில்லை. 

நீதிபதி சரவணராஜா கடந்த மாதம் 23ம் திகதியிட்ட தமது பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவிட்டு, பாதுகாப்புக் காரணமாக நாட்டை விட்டுச் சென்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் சட்டமா அதிபரை (அட்டர்னி ஜெனரல்) தாம் சந்தித்தது பற்றி நீதிபதி குறிப்பிடவில்லையாயினும் அதனை வெளிப்படையாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலும், அதற்கான காரணங்களும், அதற்கு முன்னும் பின்னுமான செயற்பாடுகளும் முக்கிய அவதானத்துக்குரியவை. 

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் விடுத்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. சட்டம் மட்டுமன்றி நீதியும் இங்கு உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. (தமிழரான நீதிபதியின் தீர்ப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற சிங்கள பௌத்த மேலாண்மை இங்கு முன்னிலை பெற்றுள்ளது.)

ஜனநாயக ரீதியான ஒரு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தின் ஓர் உறுப்பினரான சரத் வீரசேகர தம்மை இன்னமும் படை வீரராகவே காட்சிப்படுத்தி சிங்கள பௌத்த தலைவர் போன்று நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிபதிக்கு உயிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதவி விலகுவதற்கு முன்னர் சட்டமா அதிபரை செப்டம்பர் 21ம் திகதி தாம் சந்தித்தபோது, குருந்தூர்மலை வழக்கின் கட்டளைகளை மாற்றியமைக்குமாறு அவர் தம்மிடம் அழுத்தம் பிரயோகித்ததாக நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ளார். (இந்தக் கூற்று உண்மையானதாயின் இது மிகப் பாரதூரமான ஒரு செயற்பாடு.)

சட்டமா அதிபர் என்னும் பதவி நீதிமுறைச் சார்புடைய, அரசியல் சார்பற்ற (Quasi Judicial and non political position) பதவியாகும். நாட்டு நிர்வாகத்தின் பிரதம சட்ட அதிகாரி (Chief Legal Officer) இவரே. வழமையாக உயர்ந்த மதிப்புக்குரிய வழக்கறிஞர் ஒருவர் - அதிலும் முக்கியமாக சொலிசிற்றர் ஜெனரலாக இருப்பவரே இப்பதவிக்கு நியமிக்கப்படுவதுண்டு. இப்பதவி வகித்த சிலர் பின்னர் நீதியரசர்களாக நியமனம் பெற்றுள்ளனர். 

இவ்வாறு இப்பதவிக்கான தகுதி, தராதரங்கள் என்பவற்றுக்கு மாறாக நீதிமன்றம் ஒன்று வழங்கும் தீர்ப்பினை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் சட்டமா அதிபர்கள் ஈடுபடுவதில்லை - ஈடுபடவும் கூடாது. 

தற்போதைய சட்டமா அதிபர் இப்பதவியை பெற்ற 48வது அதிகாரி. இவருக்கு முன்னர் செ.நாகலிங்கம் (அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி.சுந்தரலிங்கத்தின் மூத்த சகோதரர்), சிவா பசுபதி, க. கமலசபேசன் ஆகிய தமிழர்கள் சட்டமா அதிபர்களாக பதவி வகித்துள்ளனர். 1975 தொடக்கம் 1988 வரை சட்டமா அதிபராக இருந்த சிவா பசுபதி அவர்களே ஆகக்கூடிய காலம் இப்பதவியை வகித்த ஒருவர். 

தற்போதைய சட்டமா அதிபர் சாதாரணமான ஒருவரல்ல. இவரது தந்தையார் சிவகுமார் ராஜரட்ணம் புகழ் பெற்ற அட்வகேட். கொழும்பு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். பாட்டனார் துரையப்பா ராஜரட்ணம் முடிக்குரிய புறொக்டராக கடமையாற்றியவர். பின்னர் திருகோணமலையின் முதலாவது பட்டினசபையின் தலைவராகவும் இருந்தவர். 

இந்தக் குடும்ப பின்னணியில் வந்த சஞ்ஜேய் ராஜரட்ணம் பதில் சொலிசிற்றராக இருந்தபோது, 2021 மே மாதம் ஜனாதிபதி கோதபாயவினால் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டவர். 

நீதிமன்றத் தீர்ப்பு தூக்கி வீசப்பட்டது, நீதி மறுக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு பேணப்படவில்லை என்பவற்றுக்கும் மேலாக, நீதிமன்ற கட்டளையை மாற்றியமைக்குமாறு அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதியிடம் சட்டமா அதிபர் கோரினார் என்பதே இன்றைய பேசுபொருள். இது தொடர்பாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், நீதிபதி சரவணராஜா தாமாகவே சென்று சட்டமா அதிபரைச் சந்தித்தாரென்று தெரிவித்துள்ளார். 

அவர் அழைத்துப் போனாரா, இவர் தாமாகப் போனாரா என்பதல்ல இன்றைய கேள்வி. முன்னைய நீதிமன்ற கட்டளைகளை மாற்றியமைக்குமாறு நீதிபதியிடம் சடடமா அதிபர் கோரினாரா என்பதுவே முனைப்புப் பெற்றுள்ள கேள்வி. நீதிபதி சரவணராஜா தமது வாகனத்தை கொழும்பில் விற்பனை செய்துள்ளாரென்றும், இரண்டு வெளிநாட்டு ராஜதந்திரிகளை அவர் சந்தித்தாரென்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ள விடயங்கள் இங்கு சம்பந்தப்படாதவை. 

23ம் திகதி தமது பதவி விலகலை எழுத்து மூலம் அறிவித்த பின்னர் நீதிபதி சரவணராஜா வாகனத்தை விற்கலாம், தமது வீட்டை விற்கலாம், எவரையும் சந்திக்கலாம். அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி நீதியமைச்சர் கவலை கொள்ளத் தேவையில்லை. வெளிநாடொன்றில் நீதிபதி அகதித் தஞ்சம் பெற முயன்றார் என்ற கருத்தை விதைத்து மற்றைய விடயங்களை மூடி மறைக்க விஜேதாச ராஜபக்ச முனைகின்றார். 

நீதிமன்ற கட்டளையை மாற்றியமைக்குமாறு சட்டமா அதிபர் நீதிபதியிடம் கோரினாரா இல்லையா என்பதற்கான உண்மையான பதில் வெளிவர வேண்டும். சட்டமே சவக்கிடங்குக்குள் போயுள்ள நிலையில், நீதியின் விலை என்ன என்பது சந்திக்கு வந்துள்ளது. 

No comments