நீதிமறுப்பும் சட்டமீறலும் அரசமைப்பு ஒழுங்கீனமும் ஜனநாயக படிமுறைகளை இடித்தழிக்கும் அபாயம்! பனங்காட்டான்


ஜனநாயகம் என்பது ஐந்து அடுக்குகளைக் கொண்டது. சமூக ஜனநாயகம், கட்சி ஜனநாயகம், அரசியல் ஜனநாயகம், நிர்வாக ஜனநாயகம் என்பவை நேர்த்தியாக அமைந்தால் மட்டுமே நாட்டில் ஆட்சி ஜனநாயகம் என்ற இயந்திரம் சீராக இயங்க முடியும். இலங்கையில் எந்த அடுக்கிலாவது ஜனநாயகத்தைக் காணமுடிகிறதா? 

நீதிபதி சரவணராஜா பிரச்சனைக்கான போராட்டத்தைத் தவிர தமிழர்களுக்கான தொடர் போராட்டங்களாக காணி அபகரிப்புகளுக்கு எதிரானதும் காணாமலாக்கப்பட்டோருக்குமானவை அமைந்துள்ளன. இவ்விரண்டுக்குமான போராட்டங்கள் நிரந்தரமானவையாகத் தொடரும் நிலைமையே பெரிதும் காணப்படுகிறது. 

தீராத அல்லது தீர்க்கப்பட விரும்பாத பிரச்சனைகளாக ரணில் அரசு இவற்றைக் கையாண்டு வருகிறது. நாடாளுமன்ற அமர்வுகளில் தமிழ் எம்.பிக்களின் பெரும்பாலான உரைகள் இவ்விடயங்களை ஒட்டியதாகவே இடம்பெற்று வருகின்றன. 

வடக்கு கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாடுகளின் தூதுவர்களிடமும் ராஜதந்திரிகளிடமும் இவை தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆவணங்கள் கையளிக்கப்படுகின்றன. இவற்றினால் பயனேதும் கிடைக்குமோ என்பது தெரியவில்லை. 

இது போதாதென்று, இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூடிக்கலைந்து, மீண்டும் கூடி ஆராய்ந்து வருகின்றன. மோடிக்கு ஏற்கனவே தமிழ்க் கட்சிகள் இணைந்து அனுப்பிய கடித விவகாரம் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அவரது சட்டக்கல்லூரி மாணவன் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் விவாத அரங்காக மாறியுள்ளது. 

முன்னைய கடிதம் மோடிக்குக் கிடைத்ததா இல்லையா என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதற்குப் பதில் வந்ததா இல்லையா என ஆராய்வதில் பயனில்லை. வடமாகாண சபைத் தலைவராகவிருந்த விக்னேஸ்வரன் இப்போது சகல விவகாரங்களிலும் தம்மை முதன்மைப்படுத்தி நிற்க முனைவதை அவதானிக்க முடிகிறது. ஆனால், இவரால் எதையும் ஒப்பேற்ற முடியாதிருப்பதையும் காணலாம். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி (நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் செய்தது போன்று) அதனூடாக பல காரியங்களை நிறைவேற்ற முடியுமென இவர் எடுத்த எந்த முயற்சியும் இதுவரை காரியமாகவில்லை. வடமாகாண ஆளுநரை ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதவி நீக்குவாரென ஊடகங்களுக்கு பிரத்தியேக செய்தி ஒன்றை இவர் கொடுத்திருந்தார். ரணில் தம்மிடம் கூறினார் என்பதை நம்பி அந்த அறுந்த கயிற்றில் தொங்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. மாகாண சபைக்கான ஆலோசனைச் சபை யோசனையையும் ரணில் ஏற்றுக் கொண்டதாக இவர் நம்பினார். ரணில் தம்மை ஏமாற்றி விட்டாரென்று பகிரங்கமாகக் கூறும் வழிப்போக்கனாக விக்னேஸ்வரன் இன்று காணப்படுகிறார். 

இதுபோன்று, இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க எடுக்கும் முயற்சியும் தோல்வியடையலாம். இந்தியா செல்வதற்கு மோடியின் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று தமிழரசின் மூத்த தலைவர் சம்பந்தன் சொல்லி ஒரு வருடமாகிறது என்பதை விக்னேஸ்வரன் நினைவிற் கொள்ள வேண்டும். நீதிச் சேவையில் நிரம்பக் கற்றுக் கொண்டவராக விக்னேஸ்வரன் இருப்பினும், அரசியலில் இன்னும் போதிய அனுபவத்தை அவர் பெறவில்லையென்பது தெரிகிறது. அதனாற்தான் போலும் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்து அவமானங்களைச் சுமக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். 

அரசியலில் பழம் தின்று விதை போட்ட ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொருவராக அனைவரின் தலைகளையும் கழுவி வருகிறார். இது போதாதென்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவைகளை உருவாக்கி அதனூடாக அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் ஓடித்திரிய வைத்துள்ளார். 

உருவாக்கப்பட்டுள்ள இரண்டு சட்ட வரைபுகளும் அரசதுறை அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாகவும், மனித உரிமை சட்டத்துக்கு இணங்காமல் மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டு சட்ட மூலங்களும் தெளிவற்ற வரையறைகளைக் கொண்டுள்ளனவென்றும் பேரவை குறிப்பிட்டுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டமுறையான ஆட்சிக்கு முற்றிலும் மாறுபட்டது என்று தெரிவித்துள்ள ஐ.நா.வின் நிபுணர் குழு, நடைமுறையிலுள்ள மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் குறைபாடுகளை புதியது நிவர்த்தி செய்யவில்லையென்றும் சுட்டியுள்ளது. 

சர்வதேசம் இவ்வாறு கருத்துகளையும் கவலைகளையும் வெளியிட்டு வரும் வேளையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதில்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சட்டமூலம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து வாபஸ் பெறப்பட்டதே இதற்கான காரணம். இவ்வாறு அறிவிக்கப்பட்டிருப்பதால் சர்வதேசத்தின் அதிருப்திக்கு இலங்கை அரசு சார்பு நிலை எடுத்ததாகவோ, புதிய வரைபில் உலகம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் இடம்பெறும் என்றோ எதிர்பார்க்க முடியாது. 

பிரச்சனைக்குரியதான நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு திருத்தப்படுமென சட்ட மாஅதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாற்பத்தைந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பொது அமைப்புகள், ஊடக அமைப்புகள், தனியார், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்போரால் இந்த மனுக்கள் தாக்கலாகியிருந்தன. 

மோதகத்தை கொழுக்கட்டையாகவும், கொழுக்கட்டையை மோதகமாக மாற்றுவதும் போன்று இரண்டு சட்ட சட்ட வரைபுகளையும் ரணிலின் அரசு திருத்தம்(?) செய்து புது வடிவத்தில் மீளச் சமர்ப்பிக்கவுள்ளது. இதுகூட சர்வதேசத்தையும் மனித உரிமை அமைப்புகளையும் எத்தி விளையாடும் ஓர் உத்திதான். இதற்கான அடிப்படைக் காரணம் ஜனநாயகம் என்பது நாட்டில் இறந்துபோன ஒன்றாகிவிட்டது. 

இதற்கான நிகழ்கால உதாரணமாக பொலிஸ் மாஅதிபரின் பணி நீடிப்பைப் பார்க்கலாம். வழமையாக ஒரு பொலிஸ் மாஅதிபர் ஓய்வு பெறுவதற்கு முன்னராகவே அடுத்தவர் யாரென்பது தெரிய வந்துவிடும். பணிக்கால வரிசையில் மூத்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவரே பதவி உயர்வு பெற்று பொலிஸ் மாஅதிபராவார். இதுவே முப்படைகளின் தளபதிகள் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. 

ஆனால், தற்போதைய பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்தினவின் சேவை நீடிப்பு முற்றுமுழுதாக அரசியல் கலப்பானதாகவும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதாகவும் அமைந்துள்ளது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவருக்கு ஏற்கனவே இரு தடவைகள் பணி நீடிப்பு வழங்கப்பட்டது. புதிதாக பொலிஸ் மாஅதிபர் ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பானது அரசியலமைப்புச் சபை சம்பந்தப்பட்டது. இச்சபையின் தலைவர் நாடாளுமன்ற சபாநாயகர். மொத்தம் பத்து அங்கத்தவர்களில் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் அடங்குவர். 

இச்சபை அதிகாரபூர்வமாகக் கூடி சி.டி.விக்கிரமரத்தினவுக்கு பணி நீடிப்பு வழங்குவதில்லையென்று தீர்மானித்தது. அடுத்த ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அவருக்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பை வழங்கிவிட்டு ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றுவிட்டார். அதாவது அரசியலமைப்புச் சபையின் முடிவை புறந்தள்ளிவிட்டு இந்தப் பணி நீடிப்பு வழங்கப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு சபாநாயகர் பதிலளித்தார். அரசியலமைப்புச் சபை இப்பதவிக்கு ஒருவரை பரிந்துரை செய்யலாம். ஆனால், தாம் விரும்பும் ஒருவரை நியமனம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு என்பது சபாநாயகரின் பதில். ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாததைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களும் ஜனாதிபதிக்குண்டென்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியேற்ற வேளையில் தெரிவித்த கூற்றை அடியொற்றி ரணில் செயற்படுவது தெரிகிறது. 

ரணில் நாடு திரும்பியதும் புதிய பொலிஸ் மாஅதிபராக அவரது விருப்புக்குரிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கூன் நியமனம் பெறுவாரென்ற தகவல் கசிய விடப்பட்டுள்ளது. இதுதான் உண்மையென்றால் புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவைகளைத் தீர்மானிப்பதற்கு அரசியலமைப்புச் சபையொன்று தேவையா என்ற கேள்வி எழுகிறது. 

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அது நடத்தப்படவில்லை. அடுத்தாண்டு நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் எடுக்கும் செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளன. (இன்னொரு வாரப் பத்தியில் இதனை அலசலாம்). தேர்தல்கள் உட்பட ஜனநாயக வழிமுறைச் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாதென்று இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றியம் ஒன்றிணைந்த அமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், தேர்தலை பின்போடும் நோக்கில் மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளமையையும் இந்த அமைப்பு கண்டித்துள்ளது. 

இந்த நிலையில் நாடாளுமன்றம் எதற்காக என்று நாடாளுமன்ற அமர்விலேயே கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு எம்.பி. இந்தக் கேள்வி நியாயமானது என்பதை சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் அறிவிப்பு நிரூபிக்கிறது. 

ஜனநாயகம் என்பது ஐந்து அடுக்குகளைக் கொண்டது. சமூக ஜனநாயகம், கட்சி ஜனநாயகம், அரசியல் ஜனநாயகம், நிர்வாக ஜனநாயகம் என்பவை நேர்த்தியாக அமைந்தால் மட்டுமே நாட்டில் ஆட்சி ஜனநாயகம் என்ற இயந்திரம் சீராக இயங்க முடியும். இலங்கையில் எந்த அடுக்கிலாவது ஜனநாயகத்தைக் காணமுடிகிறதா? 

No comments