மணல் வியாபாரம் :களத்தில் அமைச்சர்!
மீண்டும் மணல் வர்த்தகத்தில் ஈடுபட அரச அமைச்சர் களமிறங்கியுள்ளமை தொடர்பில் சுற்றுச்சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல் பிட்டிகள் தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்துள்ளது.
சட்ட விரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல் , மக்களுக்கு இலகுவாகவும் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் வன பரிபாலன சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் நிகழ்நிலை ஊடாக கலந்து கொண்டனர்.
எனினும் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
குறிப்பாக வடமாராட்சி கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வினை மேற்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக பெரும்பாலான மணல் திட்டுக்கள் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும், மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் வடமராட்சி கிழக்கில் ஈபிடிபி ஆதரவு மகேஸ்வரி ஞாபகார்த்த நிதியத்தால் பாரிய மணல் மோசடிகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment