ஓய்ந்துவிடாத நீதிக்கான போராட்டம்!


முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02 ஆம் திகதி  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்கமைய கடந்த 02 ஆம் திகதி ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (06) ஐந்தாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதனிடையே நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் (09) ஆம் திகதி காலை 9 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திற்கு முன்பாக நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமாகி அங்கிருந்து பொதுசந்தை ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மாவட்ட செயலாளர் ஊடாக நிதி அமைச்சின் செயலாளருக்கும் மகஜர் கையளிக்கப்பட இருக்கின்றது.

இதனிடையே வடகிழக்கு தழுவிய ரீதியில் முழு கடை அடைப்பொன்றிற்கு தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தெரியவருகின்றது.


No comments