யாழை சேர்ந்த மூதாட்டி லெபனான் சிறையில் ; 20 இலட்ச ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார்.


போலி முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் லெபனான் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவர் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நிலையில் லெபனான் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி பல்வேறு தரப்பினரிடமும் கோரி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து , வேலணை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி (வயது 64) எனும் தமது தாயாரும் லெபனான் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அவரது பிள்ளைகள் தெரிவித்துள்னர். 

அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , தமது அம்மா , பிரான்ஸில் வசிக்கும் தனது சகோதரர்களின் குடும்பத்துடன் வசிப்பதற்காக விசாவிற்கு விண்ணப்பித்தும் விசா கிடைக்காத காரணத்தால் முகவர் ஊடாக செல்ல முயன்றார். 

அதற்காக முகவர் ஒருவருக்கு 20 இலட்ச ரூபாய் பணம் முதல் கட்டமாக வழங்கியும் இருந்தார் 

அதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் , மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றிற்கு சென்று, பின்னர் லெபனான் சென்று பிரான்ஸ் செல்ல முற்பட்ட வேளையில் லெபனான் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக லெபனான் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தாயாரை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு தாம் பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தனர். 

அதேவேளை இவர்களை அழைத்து சென்ற முகவரும் கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாம் அறிவதாகவும் மூதாட்டியின் பிள்ளைகள் தெரிவித்தனர். 

No comments