இணையத்தள விளையாட்டுகள் ஊடாக யாழில் பல இலட்ச ரூபாய் மோசடி


இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார்.

இணையத்தளங்கள் ஊடாக (online) சூது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இளைஞர்கள் பல இலட்ச ரூபாய்க்களை முதலீடு செய்து அவற்றை இழந்து வருகின்றனர். 

விளையாட்டின் அறிமுகத்தின் போது சிறு தொகைகளை கட்டி , விளையாட்டில் ஈடுபட்டு வென்றால் , அவர்களுக்கு பணம் கிடைக்கும். பின்னர் ஒவ்வொரு படி நிலைகளை தாண்டும் போது , ஒவ்வொரு தொகை கட்டி , விளையாட வேண்டும். அதில் வெல்லும் போது மேலும் பணம் கிடைக்கும். 

இவ்வாறாக விளையாடி வரும் போது , பெருந்தொகை பணம் செலுத்தியதும் , அந்த விளையாட்டு குழுவில் இருந்து இவர்கள் நீக்கப்படுவதுடன் , இவர்கள் வைப்பிலிட்ட பணமும் காணாமல் போகும். அதன் பின்னரே தாம் ஏமாற்றபட்ட விடயம் அவர்களுக்கு தெரிய வரும். 

ஏமாற்றப்பட்டவர்களில் பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தயங்கும் நிலையில் , ஒரு சிலர் முறைப்பாடு செய்ய சென்ற போதும் , யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது ? எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது ? போன்ற சிக்கல்கள் உள்ளன. 

எனவே மக்கள் விழிப்பாக இருப்பதன் ஊடாகவே அதில் இருந்து தப்ப முடியும். 

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பண மோசடிகள், காசோலை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கின்றன. அத்துடன் பாரிய கடன்களால் தமது உயிர்களை மாய்ப்பவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்தன.

அது தொடர்பிலான விசாரணைகளின் போது , பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் அந்த பணத்தினை என்ன செய்தார்கள் ? எவ்வாறு அவ்வளவு பெரிய தொகை பணத்தினை செலவு செய்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே , பணத்தை பெற்றுக்கொண்ட பலரும் , இணையத்தள விளையாட்டுக்களின் ஊடாகவே தாம் பெற்றுக்கொண்ட பெருந்தொகை பணத்தினை இழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 

இதில் பாதிக்கப்பட்ட பலரும் படித்த, சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களே. அவர்களே பணத்தின் மீது ஆசை கொண்டு பணத்தினை இழந்து வருகின்றனர். 

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மாத்திரமே இவ்வாறான பண மோசடிகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என தெரிவித்தார். 

No comments